போலி அடையாள அட்டைகள் மூலம் சிம்கார்டு விற்பனை செய்த 2 பேர் கைது
- மோசடியில் ஈடுபட்டனரா? போலீசார் விசாரணை
- 44 சிம்கார்டுகள் பறிமுதல்
வேலூர்:
வேலுார் சத்துவாச்சாரி இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு காந்திநகர் பகுதியில் வாகன பரிசோதனை மேற்கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக பைக் ஒன்று வந்தது. அதில் முன்பக்கத்தில் மட்டும் பதிவெண் எழுதப்பட்டிருந்தது. பின் பக்கம் எழுதப்பட வில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அதில் வந்த 2 பேரை விசாரித்தனர்.அவர்கள் கொணவட்டத்தை சேர்ந்த இப்ராஹிம் (வயது 23) ஷேக் தஸ்தகீர் (21) என்பது தெரியவந்தது.
அவர்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது 44 சிம் கார்டுகள் இருந்தன.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்கள் இருவரையும் சைபர் கிரைம் போலீசில் ஒப்படைத்தனர்.இன்ஸ்பெக்டர் அபர்ணா, சப் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் விசாரணை நடத்தினர்.
இருவரும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தொலைத் தொடர்பு நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துள்ளனர். போலியான அடையாள அட்டை மூலம் சிம்கார்டு களை பெற்று விற்பனை செய்தது தெரியவந்தது.
முதல்கட்ட விசாரணையில், 'ஜெராக்ஸ் எடுக்கும் சில கடைகளில், இவர்கள் தொடர்பு வைத்துக் கொண்டு, அங்கு ஆதார் கார்டு ஜெராக்ஸ் எடுக்க வருபவர்களுக்கு தெரியாமல், ஒரு ஜெராக்ஸ் அதிகப்படியாக எடுத்துக் கொண்டு, அதற்கு குறிப்பிட்ட பணம், அந்தக் கடைக்காரர்களுக்கு கொடுத்துள்ளது தெரிய வந்துள்ளது.
மேலும், இந்த ஆதார் கார்டில் வேறு போட்டோ ஒட்டி, அதன் மூலமாக 100க்கும் அதிகமான சிம்கார்டுகளை பெற்று, பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டிருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
சைபர் கிரைம் போலீசார் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.