வேலூர் சரகத்தில் போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்
- டி.ஐ.ஜி. முத்துசாமி வழங்கினார்
- ஆலோசனை மற்றும் அறிவுரை
வேலூர்:
வேலூர் சரகத்திற்கு உட்பட்ட வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு போக்சோ வழக்குகளில் குற்றவாளி களுக்கு விரைந்து தண்டனை பெற்றுத் தருதல், குட்கா பொருட்களை பறிமுதல் செய்தல் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உடனடியாக நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்டவை களில் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது.
இதில் டி.ஐ.ஜி முத்துசாமி கலந்துகொண்டு போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 39 போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
குறிப்பாக பாகாயம் போலீஸ் நிலையத்தில் பதிவான வழக்கு ஒன்றில் 90 பவுன் நகை திருட்டு போனதை விரைந்து கண்டுபிடித்து மீட்ட போலீசாருக்கு டி.ஐ.ஜி முத்துசாமி தனது சொந்த பணத்திலிருந்து ரூ.10,000 வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
மேலும் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள ஆலோசனை மற்றும் அறிவுரை வழங்கினார். அப்போது போலீஸ் சூப்பிரண்டுகள் மணிவண்ணன்,கிரண் ஸ்ருதி, ஆல்பர்ட் ஜான் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதைத்தொடர்ந்து குற்ற தடுப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் டி.ஐ.ஜி முத்துசாமி தலைமையில் நடந்தது.