வேலூரில் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை
- நள்ளிரவு 12 மணிக்கு குழந்தை ஏசு சொரூபத்தை காட்டினர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வேலூர்:
வேலூரில் உள்ள தேவாயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
ஏசு கிறிஸ்து பிறந்த நாள் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நேற்று நள்ளிரவு தேவாலயங்களில் கூட்டு திருப்பலி மற்றும் சிறப்பு ஆராதனை நடந்தது. பலர் புத்தாடைகள் அணிந்து ஆலயங்களுக்கு சென்றிருந்தனர்.
விழாவை முன்னிட்டு பலர் தங்கள் வீடுகளில் குடில்கள் அமைத்து, வண்ண ஸ்டார்களை தொங்கவிட்டிருந்தனர். பேக்கரிகளில் கேக் விற்பனை களை கட்டியது. வேலூர் மாநகரில் உள்ள தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
வேலூர் விண்ணேற்பு அன்னை பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. ஏசு பிறந்ததை குறிக்கும் விதமாக நள்ளிரவு 12 மணிக்கு குழந்தை ஏசு சொரூபத்தை காட்டினர். பின்னர் ஆலய வளாகத்தில் உள்ள குடிலில் சொரூபம் வைக்கப்பட்டது.
இதில் கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டு பிரார்த்தனை நடத்தினர்.
வேலூர் சார்பனா மேட்டில் உள்ள ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். ஒருவருக்கொருவர் கிறிஸ்து பிறப்பு நாளையொட்டி கைகுலுக்கி கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
வேலூர் சி.எஸ்.ஐ. மத்திய தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. ஆலய வளாகத்தில் குழந்தைகள் பலர் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
காட்பாடி ரோடு புதிய பஸ் நிலையம் எதிரில் உள்ள பெந்தெகொஸ்தே சபையிலும் கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனை நடந்தது. இதேபோல குடியாத்தம், அணைக்கட்டு, பேரணாம்பட்டு, பள்ளிகொண்டா மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.