பாதாள சாக்கடை பணிகளை கலெக்டர் திடீர் ஆய்வு
- ஒப்பந்ததாரருக்கு எச்சரிக்கை
- சட்டபடி நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு அறிவுரை
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஹோலி கிராஸ் பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாதிரி பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி மற்றும் மாதிரி பள்ளி முதல்வர் தாரகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கலெக்டர் பேசியதாவது:-
மாதிரி பள்ளிகளில் மாணவர்கள் தேர்ச்சி 100 சதவிகிதமாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. கல்வியில் மாணவர்கள் கவணம் செலுத்தி நல்ல முறையில் படிக்க வேண்டும். கல்வி கற்பதோடு மட்டுமல்லாமல், சமுதாயத்திற்காக சேவை செய்யும் துறைகளில் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். இதில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து கலெக்டர் சத்துவாச்சாரி காந்தி நகர், மந்தை வெளி, சக்தி நகர், பூங்காநகர் ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகளை ஆய்வு செய்தார். அப்போது சாலையின் நடுவே பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளங்களின் மூடிகள் சிலாப்கள் உடைந்து மக்கள் தவறி உள்ளே விழும் ஆபத்தான நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக ஒப்பந்ததாரரை வரவழைத்து எச்சரிக்கை செய்ததுடன், அந்த பணிகளை விரைந்து முடிக்கவில்லை என்றால் அவர் மீது வழக்குபதிவு செய்து சட்டபடியான நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு அறிவுறுத்தினார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.