பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் வினியோகம்
- மாவட்டம் வாரியாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது
- பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு வழங்க ஆசிரியர்களுக்கு அறிவுரை
வேலுார்:
கோடை விடுமுறை முடிந்து, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை ஜூன் 1-ந் தேதியும், ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை ஜூன் 5-ந் தேதியும் வகுப்பு கள் தொடங்க உள்ளன.
இதையொட்டி, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், 2023-24ம் ஆண்டில் 1 முதல் பிளஸ்-2 வரையிலான பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள் உள்ளிட்ட இலவச நலத்திட்ட உபகரணங்கள் எல்லாம், பள்ளிக்கல்வித்துறை மூலமாக மாவட்டம் வாரியாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
வேலுார் மாவட்டத்தில் 157 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு தேவையான பாடப் புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள், அந்தந்த பள்ளிகளுக்கு வினியோகம் செய்யும் பணி, காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று தொடங்கியது.
முதல்கட்டமாக, வேலுார், அணைக்கட்டு, கே.வி.குப்பம், காட்பாடி ஆகிய ஒன்றியங்களை சேர்ந்த பள்ளிகளுக்கு புத்தகங்கள் நேற்று வழங்கப்பட்டன. தொடர்ந்து, குடியாத்தம், பேரணாம்பட்டு, கணியம்பாடி ஒன்றியங்களை சேர்ந்த பள்ளி களுக்கு ஓரிரு நாட்களில் புத்தகங்கள் வழங்கப்படும்.
அதோடு, மாணவர் களுக்கு வழங்கப்பட்ட புத்தகங்களை எல்லாம், பள்ளிகளில் பாதுகாப்பாக வைத்து, பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு வழங்கவேண்டும் என்றும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர, மாவட்டத்தில் இயங் கும் 779 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி, ஓரிரு நாளில் தொடங்கப்படும் என கல்வித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.