உள்ளூர் செய்திகள்

கல்லூரி மாணவிகளுக்க டி.ஐ.ஜி. முத்துசாமி பரிசு கோப்பை வழங்கினார்.

போட்டி தேர்வுகளை கண்டு பயப்பட கூடாது

Published On 2023-04-29 08:16 GMT   |   Update On 2023-04-29 08:16 GMT
  • தாழ்வு மனப்பான்மையை அகற்றுங்கள்
  • டி.ஐ.ஜி. முத்துசாமி பேச்சு

வேலூர்:

வேலூர் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரி ஆண்டு விழா இன்று நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் மலர் தலைமை தாங்கினார்.

இயற்பியல் துறை தலைவர் மாரிமுத்து வாழ்த்தி பேசினார். உடற்கல்வி இயக்குனர் அகிலன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக வேலூர் சரக டி.ஐ.ஜி முத்துசாமி கலந்து கொண்டு மாணவர்களிடையே பேசினார்.

அப்போது மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

போட்டித்தேர்வுகளில் பங்கேற்க ஒரு பட்டப் படிப்பு மட்டும் போதுமானது. அதை வைத்து மத்திய மாநில அரசு பணிகளில் பங்கேற்கலாம். காவல்துறையில் பணியாற்ற விரும்பினால் படிக்கும் போதே அதற்கான தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

நாம் எந்த பணிக்கு செல்ல வேண்டும் என்று நினைக்கிறோமோ அந்த பணி மீதான ஆசை அதிகமாக இருக்க வேண்டும். நாம் விரும்பும் பணி நமக்கு கிடைத்தால் அதில் சாதிக்கலாம்.

போட்டி தேர்வுகள் மிகவும் எளிமையானது. அதை கண்டு அச்சப்பட வேண்டாம். முயற்சி செய்தால் இலக்கை அடையலாம். வாழ்வில் எண்ணங்கள் மிக உயர்ந்ததாக இருக்க வேண்டும். உயர்ந்த ஆசை இருந்தால் இலக்கைத் தொடலாம்.

வாழ்வில் சாதிக்க தகுதி மட்டுமே தேவையில்லை.தகுதியுடன் திறமையும் வேண்டும். கற்றுக் கொள்வதில் அதீத ஆர்வம் வேண்டும்.

படிப்புடன் சமூக அக்கறையும் வேண்டும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் போது அதற்கான அணுகுமுறையும் மிக முக்கியமானதாக அமைகிறது. முறையாக திட்டமிட்டு பயணிக்க வேண்டும்.

பல கிராமப்புற மாணவர்கள் இங்கு படிக்கின்றனர். முதலில் உங்களுக்குள் உள்ள தாழ்வு மனப்பான்மையை அகற்ற வேண்டும். யாரிடமும் பேசக்கூடிய அளவிற்கான துணிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

உயர்ந்த பதவிகளை அடைய வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அந்த வாய்ப்புகளை முறையாக பயன்படுத்தினால் தேர்வில் வெற்றி பெறலாம். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் வேலூர் டி.எஸ்.பி. திருநாவுக்கரசு, இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் கணிதவியல் துறை தலைவர் பத்மினி நன்றி கூறினார்.

Tags:    

Similar News