வேலூர் ஓல்டு டவுன் நாட்டாண்மை தேர்வு கோஷ்டி மோதல் குறித்து வதந்தி பரப்ப வேண்டாம்
- போலீசார் எச்சரிக்கை
- இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு
வேலூர்:
வேலூர் தெற்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஓல்டு டவுன் பகுதியில் கடந்த 23-ந் தேதி பிற்பகல் சுமார் 2 மணியளவில், ஊர் நாட்டாண்மை தேர்ந்தெடுத்தது தொடர்பாக ஏற்கனவே இருந்த பிரச்சினையில் இருதரப்பினருக்கு இடையே கோஷ்டி பூசல் ஏற்பட்டு ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி கற்கள் மற்றும் பாட்டில்கள் வீசி தாக்கிக்கொண்டனர்.
இதில் அவர்களுக்கு லேசான காயங்கள் மட்டும் ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் இருதரப்பினர் மீதும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டும், வழக்கில் தொடர்புடைய நபர்கள் குறித்து சம்பவ இடத்தில் பதிவாகியுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து அவர்கள் அனைவரையும் கைது செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் குறித்து தகவல்கள் யாருக்கேனும் கிடைத்தால் வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் தெரிவிக்கலாம். அப்பகுதியில் மேற்கொண்டு எவ்விதபிரச்சினை ஏற்படாமல் தவிர்க்க போலீசார் பணிய மர்த்தப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வீண் வதந்திகளை நம்பி மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என்று கேட்டு க்கொள்ளப்படுகின்றது.