குடியாத்தம் கூட நகரில் ெரயில்வே மேம்பாலம் கட்ட வலியுறுத்தி பா.ம.க. ஆர்ப்பாட்டம்
- பொதுமக்கள் பல கிலோமீட்டர் சுற்றி செல்வதாக புகார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் அடுத்த கூடநகரம் ெரயில்வேகேட் பகுதியில் ெரயில்வே மேம்பாலம் அமைக்க கடந்த 6ஆண்டுகளுக்கு முன்பு கூடநகரம் ெரயில்வே கேட் மூடப்பட்டது.
இதனால் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மாணவர்கள், பொதுமக்கள், விவசாயிகள் என ஆயிரக்கணக்கானோர் பல கிலோமீட்டர் சுற்றிக்கொண்டு தங்கள் பகுதிக்கு செல்லும் அவல நிலை உள்ளது.
குறிப்பாக கூடநகரம் கிராமத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், கூட்டுறவு வங்கி, மேல் ஆலத்தூர் கிராமத்தில் உள்ள வங்கி, மின்சார வாரிய அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பொது மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய இடங்களுக்கு செல்ல இந்த ெரயில்வே கேட் மூடப்பட்டதால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும் இந்த ெரயில்வே மேம்பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்தும் நிலம் கையகப்படுத்தப்பட்டு அதற்கான இழப்பீடு தொகை வழங்கப்பட்டும் ெரயில்வே மேம்பால பணியை செய்யாமல் காலம் தாழ்த்தி வரும் நெடுஞ்சாலை துறையை கண்டித்து மேலூர் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கூட நகரம் ெரயில்வே கேட் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் என்.குமார் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் வெங்கடேசன், மாவட்ட அமைப்புச் செயலாளர் பாலாஜி, ஒன்றிய செயலாளர் தினகரன், காமராஜ் அரவிந்த், ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட நகரம் ஊராட்சி மன்ற தலைவர் பி.கே.குமரன் வரவேற்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர்கள் ரமேஷ், குமார், முகமதுபாஷா மாவட்ட பொறுப்பாளர்கள் குணசீலன், அன்பரசன், திருமலை, கோபி, சதீஷ், ஞானவேல் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் உடனடியாக ெரயில்வே கேட்டை திறந்து விட வேண்டும், ரயில்வே மேம்பாலம் உடனடியாக கட்டுவதற்கான பணிகளை நெடுஞ்சாலை துறை தொடங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.