உள்ளூர் செய்திகள்

கொணவட்டம் அரசு பள்ளியில் தலைமையாசிரியர் பெற்றோர்கள் இடையே வாக்குவாதம் நடந்த காட்சி.

அரசு பள்ளிகளில் பெற்றோர்கள் போராட்டம்

Published On 2023-06-22 09:35 GMT   |   Update On 2023-06-22 09:35 GMT
  • தலைமை ஆசிரியரிடம் கடும் வாக்குவாதம்
  • காரணம் இல்லாமல் மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் வழங்கியதாக புகார்

வேலூர்:

வேலூர் கொணவட்டம் அரசு மேல்நிலை ப்பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இந்த நிலையில் நேற்று, பள்ளியில் படிக்கும் மாணவன் ஒருவனுக்கு தலைமை ஆசிரியர் மாற்றுச் சான்றிதழ் வழங்கியதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இன்று கொணவட்டம் அரசு பள்ளியை முற்றுகையிட்டனர். காரணம் இல்லாமல் மாணவர்களுக்கு ஏன் மாற்றுச்சான்றிதழ் வழங்கினீர்கள்? என கேட்டு தலைமை ஆசிரியரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது இந்த பிரச்சனை தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் கொணவட்டம் அரசு பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.

அணைக்கட்டு அருகே உள்ள இலவம்பாடியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 270 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இவர்களுக்கு பாடம் நடத்த, தலைமை ஆசிரியர் உள்பட 14 பேர் பணியாற்றுகின்றனர்.

பள்ளி தலைமை ஆசிரியர் கஜேந்திரனை கடந்த ஏப்ரல் மாதம் பேரணாம்பட்டு அருகே உள்ள அரவட்லாவுக்கு பணியிடம் மாற்றம் செய்து கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

வேறு பள்ளிக்கு செல்ல மறுத்த கஜேந்திரன், இளவம்பாடியிலேயே பள்ளி தலைமை ஆசிரியராக தொடர்ந்து பணியாற்றி வருகிறார். மேலும் தற்போது மருத்துவ விடுப்பு எடுத்து, பள்ளிக்கு வருவதையும் தவிர்த்து விட்டார்.

தலைமை ஆசிரியர் இல்லாததால் மாணவர் சேர்க்கை மற்றும் அத்தியாவசிய பணிகள் அதிகம் பாதிக்கப்படுகிறது. எனவே பள்ளி தலைமை ஆசிரியரை கண்டித்து, அந்த பகுதி மக்கள் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் இன்று பள்ளியை முற்றுகையிட்டனர். தங்களது பிள்ளைகளின் மாற்று சான்றிதழ் கேட்டு பள்ளி தலைமை ஆசிரியை (பொறுப்பு) பூங்குழலியிடம் வழங்கினார். மேலும் மாற்றுச் சான்றிதழ் தரும் வரை கலைந்து செல்ல மாட்டோம் எனக் கூறி பள்ளி வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட கல்வி அலுவலர் அங்குலட்சுமி, பெற்றோர்களிடம் போனில் தொடர்பு கொண்டு சமரசம் பேசினார்.

உயர் அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News