உள்ளூர் செய்திகள்

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் வளாகத்தில் குவிந்துள்ள பக்தர்கள்

வேலூர் பொழுது போக்கு மையங்களில் குவிந்த மக்கள்

Published On 2023-01-17 09:40 GMT   |   Update On 2023-01-17 09:40 GMT
  • கோட்டை, ஏலகிரி, அமிர்தியில் கடும் கூட்டம்
  • காணும் பொங்கல் கோலாகலமாக நடந்தது

வேலூர்:

பொங்கல் பண்டிகை 3 நாட்களாக உற்சாகமாக கொண்டாடப்படுவது வழக்கம். தை முதல் நாளான நேற்று முன்தினம் வீடுகளில் பொங்கல் வைத்தும், மாட்டு பொங்கல் தினமான ேநற்று மாடுகளை அலங்கரித்தும் மக்கள் வழிபட்டனர்.

3-ம் நாளான இன்று காணும் பொங்கல் கொண் டாட்டம் களை கட்டியது. தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலா தலங்கள், பொழுது போக்கு மையங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக ஆர்ப்பரித்து திரண்டனர்.

வேலூர் மாவட்டத்திலும் காணும் பொங்கலை பொதுமக்கள் உற்சாகமாகக் கொண்டாடினர்.

இதையொட்டி, வேலூர் கோட்டைக்கு ஆயிரக்கணக்கான மக்கள், குழந்தைகள் வந்திருந்தனர்.

அவர்கள் கோட்டையைச் சுற்றிப்பார்த்ததுடன், அந்தப் பகுதியிலுள்ள புல்தரையில் அமர்ந்து விளையாடி மகிழ்ந்தனர். பொங்கலையொட்டி, கோட்டையிலுள்ள ஜலகண்டேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது.

மேலும், மக்கள் வருகையையொட்டி கோட்டை நுழைவு வாயில் பகுதியில் கரும்பு, தர்பூசணி, குளிர்பானக் கடைகளும், குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மை கடைகளும் அமைக்கப்பட்டிருந்தன.

மேலும், அமிர்தியில் உள்ள வனப்பூங்காவுக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் வந்திருந்து காணும் பொங்கலை கொண்டாடினர். இதேபோல், கோட்டை பூங்கா,தங்கக்கோவில், உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சுற்றுலாத் தலங்கள், கோவில்களிலும் கூட்டம் அலைமோதியது.

ஏலகிரி மலையில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை முதல் தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) வரை 4 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் தங்களது குடும்பத்தினருடனும், உறவினர்களுடனும் ஏலகிரி மலை சுற்றுலா தலத்திற்கு வந்தனர்.

இங்குள்ள பல்வேறு இடங்களை கண்டு ரசித்தும், புங்கனூர் ஏரி படகுத்துறையில் படகில் சவாரி செய்தும் செல்பி எடுத்தும் உற்சாகம் அடைந்தனர்.

மேலும் இங்கு பல்வேறு பகுதிகளிலிருந்து வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் பழ வகைகள், இனிப்பு வகைகள், சாக்லேட்டுகள் போன்றவைகளை சுற்றுலா பயணிகள் வாங்கி மகிழ்ந்தனர்.

ஏலகிரி மலையில் உள்ள பல்வேறு பகுதிகளில் தனியார் பொழுதுபோக்கு கூடங்களும் அதிக அளவில் உள்ளதால் தங்களது குடும்பத்தினருடன் சென்று சாகச போட்டிகள், பறவைகள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு கூடங்களை கண்டு ரசித்தனர்.

Tags:    

Similar News