வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம்
- ரூ.1.17 லட்சத்தை மீட்டு தர கோரி மகளிர் சுய உதவி குழுவினர் மனு
- போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி முன்னிலை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்கள் குறைகள் மற்றும் புகார்களை மனுக்களாக அளித்தனர். பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
பள்ளிகொண்டா அருகே ஈடியர் பாளையத்தை சேர்ந்த பெண்கள் சிலர் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
எங்கள் கிராமத்தை சேர்ந்த சுமார் 14 பெண்கள் ஒன்றிணைந்து மகளிர் சுய உதவிக் குழு ஒன்று கடந்த 2019 -ம் ஆண்டு ஆரம்பித்தோம். 2020 -ம் ஆண்டு எங்கள் குழுவை சேர்ந்த உறுப்பினர் ஒருவர் வங்கியில் இருந்து ரூ.1 லட்சத்து 17 ஆயிரம் எடுத்தார்.
சில மாதங்கள் அதற்கான வட்டி செலுத்தினார். பின்னர் அவர் வட்டியும் செலுத்தவில்லை, வாங்கிய தொகையும் திருப்பி கொடுக்கவில்லை. தற்போது நாங்கள் அனைவரும் அந்த தொகையை செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த உறுப்பினரிடம் கேட்கச் சென்றால் அவர் தலைமறைவாகிவிட்டார்.
பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.