உள்ளூர் செய்திகள்

பொதுமக்கள் மனு அளிக்க வந்த காட்சி

கஸ்பா ரெயில்வே மேம்பாலத்தில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்

Published On 2023-11-27 09:42 GMT   |   Update On 2023-11-27 09:42 GMT
  • கலெக்டர் அலுவலகத்தில் மனு
  • வேலூரில் 2 பேர் பலி எதிரொலி

வேலூர்:

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்கள் குறைகள் மற்றும் புகார்களை மனுக்களாக அளித்தனர். பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

காட்பாடி சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வீரத்தமிழர் முன்னணி செயலாளர் விஜய் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது;-

மோட்டூர் சர்க்கரை ஆலை பஸ் நிலையம் அருகே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியின் கொடி கம்பத்தை நட்டோம்.

தற்போது கம்பம் பழையதாக உள்ளது. இதனால் பெயிண்ட் அடிப்பதற்காக பிடுங்கி புதுப்பித்த பின்பு திரும்பவும் அதே பகுதியில் நட்டோம்.

ஆனால் காட்பாடி தாசில்தார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் கொடிக்கம்பத்தை அகத்திவிட்டனர். எனவே கொடிக்கம்பத்தை மீண்டும் நடுவதற்கு ஆணையிட வேண்டும் என கூறியிருந்தார்.

தொரப்பாடியை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் மண்டல தலைவர் மதியழகன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது;-

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 4-வது மண்டலம் தொரப்பாடி நேதாஜி தெரு, பலராம முதலி தெரு, அண்ணாமலை கவுண்டர் தெரு, திரவுபதி அம்மன் கோவில் தெரு, எம்.சி ரோடு, கஸ்பா இப்ராஹிம் சாஹெப்தெரு உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீர் கால்வாய், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரிவர செய்து தருவதில்லை.

குப்பைகள் சரிவர வாரவில்லை. கொசு தொல்லைகள் மற்றும் தெருநாய்களின் தொல்லைகள் மிக அதிகமாக உள்ளது. நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

எனவே இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

கஸ்பா ஆரன்பாளையம் வசந்தபுரம் பகுதி பொதுமக்கள் கூட்டமாக வந்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் கீழ் கஸ்பா பகுதியில் மேம்பாலம் கட்டப்பட்டது.

இதனை கஸ்பா, வசந்தபுரம், ஆர்.என். பாளையம், சதுப்பேரி, சிறுங்காஞ்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர்.

குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு இந்த மேம்பாலம் மிகவும் உதவியாக உள்ளது. இந்த பாலத்தின் பக்கவாட்டு தடுப்பு சுவர் உயரம் குறைவாக உள்ளது. இதனை உயர்த்தி கட்ட வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். ஆனால் எந்தெந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் கடந்த 12-ந் தேதியன்று தீபாவளி பண்டிகை தினத்தன்று தொரப்பாடி பகுதியைச் சேர்ந்த 2 இளைஞர்கள் இந்த மேம்பாலத்தின் பக்கவாட்டுச் சுவரில் மோதி நிலைதடுமாறி மேலிருந்து கீழே விழுந்தனர். 40 அடி உயரமுள்ள பாலத்தின் மீது விழுந்ததில் கொடூரமாக தலை சிதறி உயிழந்தனர்.

எனவே பாலத்தின் இருபுறமும் உள்ள தடுப்பு சுவரின் உயரத்தை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Tags:    

Similar News