- 500 போலீசார் குவிப்பு
- எந்த பொருட்களும் கொண்டுவரக் கூடாது என கட்டுப்பாடு
வேலூர்:
வேலூரில் இன்று மாலை ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடக்கிறது. சலவன் பேட்டையில் உள்ள ஆனை குலத்தம்மன் கோவிலில் இருந்து ஆர் எஸ் எஸ் ஊர்வலம் தொடங்குகிறது. ஊர்வலத்தை 3 மாநில சேவா தள அமைப்பாளர் பத்மகுமார் தொடங்கி வைக்கிறார்.
ஊர்வலத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். ஊர்வலம் ரெட்டியப்பா முதலி தெரு, கண் ஆஸ்பத்திரி, திருப்பதி தேவஸ்தானம் வழியாக வந்து அண்ணா கலையரங்கத்தில் நிறைவடைகிறது.
மாலை 6 மணிக்கு மேல் பொது கூட்டம் நடைபெற உள்ளது. ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை யொட்டி வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தலைமையில், 4 டிஎஸ்பிக்கள், 15 இன்ஸ்பெக்டர்கள், 40 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 500 போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
மேலும் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் ஊர்வலம் நடைபெறும் பாதை முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்கள் சீருடை மட்டுமே அணிந்து வரவேண்டும். மற்றபடி எந்த பொருட்களும் தங்களுடன் கொண்டுவரக் கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.