இலங்கை தமிழர்களுக்கு கட்டப்படும் வீடுகள் குறித்து உள் நோக்கத்துடன் வதந்தி
- கலெக்டர் பாய்ச்சல்
- தரமாக கட்டி முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு
வேலூர்:
வேலூர் அருகே உள்ள மேல் மொணவூரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் அரசு சார்பில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுகிறது. இந்த பணிகள் தற்போது நடந்து வருகிறது. இன்று காலை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கட்டுமான பணிகளில் எந்த காரணம் கொண்டும் தரம் குறைவாக இருக்கக்கூடாது. தரமாக கட்டி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இது குறித்து கலெக்டர் கூறுகையில்:-
மேல் மொணவூரில் இலங்கை தமிழர்களுக்கு அரசு சார்பில் வீடுகள் கட்டும் பணிகளை கடந்த ஜூலை மாதம் முதல்அமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
தற்போது 5 தொகுப்புகளாக 220 வீடுகள் கட்டப்படுகிறது. இதில் 144 வீடுகள் ஆரம்ப கட்டப் பணிகள் நிறைவடைந்து விட்டன. மேலும் சில வீடுகள் அதனையும் தாண்டி பணிகள் நடந்து வருகிறது.
தீபாவளி பண்டிகையால் கடந்த 5 நாட்களாக கட்டுமான பணிகள் நடைபெறவில்லை. இன்று முதல் மீண்டும் பணிகள் நடக்கிறது.
இதில் குறைந்த அளவிலான பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். வெளியூர் சென்ற அவர்கள் விரைவில் திரும்புவார்கள். அதன் பிறகு முழுமையாக பணிகள் நடைபெறும். இங்கே சாலை மற்றும் கால்வாய் அமைக்க முதலமைச்சர் உத்தரவிட்டார். அதன்படி கால்வாய் மற்றும் சாலை வசதிகள் அமைத்து தரப்படும்.
மேலும் ஏற்கனவே உள்ள இலங்கை தமிழர் குடியிருப்பு பகுதிகளிலும் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
உள் நோக்கத்துடன் வதந்தி
வாரம் ஒரு முறை கட்டுமான பணிகள் ஆய்வு செய்யப்படும். சமூக வலைதளங்களில் இலங்கை தமிழர் குடியிருப்புகள் தரம் இல்லாமல் கட்டப்படுவதாக வதந்தி பரப்பி வருகின்றனர். இதில் உள்நோக்கம் உள்ளது. பிப்ரவரி, மார்ச் மாதத்திற்குள் பணிகள் நிறைவடையும்என்றார்.