உள்ளூர் செய்திகள்

ஆடி அமாவாசையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

Published On 2023-08-16 09:28 GMT   |   Update On 2023-08-16 09:28 GMT
  • அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது
  • பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

வேலூர்:

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் அமாவாசை, பவுர்ணமி மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு கூழ்வார்த்தல், பொங்கல் வைத்தல், சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

அதன்படி ஆடி அமாவாசை தினமான இன்று அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும், அலங்காரமும் நடந்தது.அம்மன் கோவில்களில் பக்தரகள் கூழ் ஊற்றி ஆடு, கோழிகளை படையலிட்டு வழிபட்டனர்.

ரத்தினகிரியில் உள்ள பாலமுருகன் கோவிலில் ஆடி அமாவாசை முன்னிட்டு சிறப்பு பூஜைகளும், அபிஷேகமும், ஆராதனை களும் நடைபெற்றது. பாலமுருகனுக்கு வண்ண மலர்களால் அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வேலூர் பாலாற்றங்கரை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள செல்லியம்மன் கோவிலில் அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் ஜலகண்டேஸ்வரர் கோவில், சலவன்பேட்டை ஆனை குளத்தம்மன் கோவில், வேலூர் காட்பாடி சாலையில் உள்ள விஷ்ணு துர்க்கையம்மன் கோவில், சத்துவாச்சாரி ரங்காபுரத்தில் உள்ள பூங்காவனத்தம்மன் கோவில், தோட்டப் பாளையத்தில் உள்ள படவேட்டம்மன் கோவில், சைதாப்பேட்டை மலையடிவாரத்தில் உள்ள தேவி கருமாரியம்மன், மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள கருமாரியம்மன் மற்றும் வேலூரில் உள்ள வேம்புலியம்மன், சோளாபுரி அம்மன் உள்பட அனைத்து அம்மன் கோவில்களிலும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

குடியாத்தம் புதுப்பேட்டை படவேட்டு எல்லையம்மன் கோவில், பிச்சனூர் காளியம்மன்பட்டி காளியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

வெட்டுவாணம் எல்லையம்மன் கோவிலில் ஆடி அமாவாசை முன்னிட்டு பக்தர்கள் சாமிதரிசனம் செய்வதற்கு காலையில் இருந்து கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர்.

கோவில் வளாகத்திலும், கோவிலுக்குச் செல்லும் சாலையிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பொங்கல் வைத்து ஆடு, கோழிகளை படையலிட்டு வழிபட்டனர்.

Tags:    

Similar News