காட்பாடி ரெயில்வே மேம்பாலத்தில் இருசக்கர வாகனங்கள் இயக்கப்பட்டன
- பணிகள் நிறைவடைந்தது.
- 4-ந் தேதி முதல் பஸ், லாரிகளுக்கு அனுமதி
வேலூர்:
காட்பாடி ரெயில்வே மேம்பாலத்தில் பழுது சீரமைக்கும் பணிகள் கடந்த மாதம் 1-ந் தேதி தொடங்கியது.
இதைத் தொடர்ந்து மேம்பாலத்தில் 3 இணைப்புகளில் ஏற்பட்ட விரிசலை சீரமைக்கும் வகையில் ரப்பர் பேடு இரும்புச் சட்டம் கம்பிகள் பொருத்தப்பட்டன. அதோடு பாலத்தின் இணைப்பை உறுதி செய்யும் வகையில் அந்த பகுதியில் கெமிக்கல் மற்றும் சிமெண்ட் கலவை கொண்டு பேக்கிங் செய்ய ப்பட்டது.
இந்த பணிகள் அனைத்தும் கடந்த 18-ந் தேதியுடன் நிறைவடை ந்தது. இணைப்பு பகுதியில் செய்யப்பட்ட பணிகள் செட் ஆவதற்கு 10 நாட்கள் கால அவகாசம் எடுத்துக் கொள்ள ப்பட்டது.
நேற்று ரெயில்வே பாலத்தின் மீது கனரக வாகனங்களை இயக்கி சோதனை செய்தனர்.
இதற்காக தலா 30 டன் எடையில் மொத்தம் 120 டன் எடை கொண்ட நான்கு லாரி மேம்பாலத்தின் மீது ஒரே நேரத்தில் இயக்கியும் நிறுத்தியும் பாலத்தின் அதிர்வு தன்மை பளுதாங்கும் தன்மை குறித்து பிரிட்ஜ் டெஸ்டிங் எந்திரம் மூலமாக ெரயில்வே என்ஜினீயர்கள் சோதனை செய்தனர்.
அப்போது இதற்கு முன்னர் பாலத்தின் மீது கனரக வாகனங்கள் சென்ற போது ஏற்பட்ட அதிர்வுகள் சீரமைக்கும் பணி முடிந்த பிறகு ஏற்படவில்லை. அதோடு போக்குவரத்துக்கும் பாலம் தயார் நிலையில் உள்ளது என தெரிவிக்கப்பட்டது.
அதே நேரம் பாலத்தின் மீது தண்ணீர் தேங்காத வகையில் குழாய் புதைக்கும் பணிகள் நடைபெற உள்ளது.
இருசக்கர வாகனங்கள்
இந்த நிலையில் இன்று காலை முதல் ரெயில்வே பாலத்தில் இருசக்கர வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுவதாக கதிர் ஆனந்த் எம்.பி. தெரிவித்தார்.அதன்படி பாலத்தில் ரெயில்வே மேம்பாலத்தில் இன்று காலை இருசக்கர வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. இதனால் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அத்து மீறி சில ஆட்டோக்களும் பாலத்தின் மீது இயக்கப்பட்டன. அந்தப் பகுதியில் போக்குவரத்து போலீசார் நிறுத்தப்பட்டு இரு சக்கர வாகனங்களை மட்டும் அனுமதித்து வருகின்றனர். கனகரக வாகனங்கள் வழக்கம்போல் மாற்று பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன. வருகிற 4-ந்தேதி முதல் பஸ் கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.