வேலூர் மாவட்ட அளவிலான இசை, நடன கலைப்போட்டிகள்
- பங்கேற்க கலெக்டர் அழைப்பு
- முதலிடம் பெறும் இளைஞர்கள் மாநில அளவிலான போட்டிக்கு அனுமதி
வேலூர்:
வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
கலைத்துறையில் சிறந்து விளங்கும் இளைஞர்களை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்திட 17 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே, கலைப்போட்டிகள் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் நடத்திட அரசு ஆணையிட்டுள்ளது.
குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய 5 பிரிவுகளில் வேலூர் மாவட்ட அளவி லான கலைப் போட்டிகள் வரும் 29-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) காலை 10 மணியளவில் வெங்க டேஷ்வரா மேல்நிலைப்பள்ளி, ஆபிசர்லைன், வேலூர். என்ற முகவரியில் நடக்கிறது. இப்போட்டியில் தனிநபராக பங்கேற்க வேண்டும். குழுவாக பங்கு பெற அனுமதி இல்லை,
குரலிசைப் போட்டி யிலும், நாதசுரம், வயலின், வீணை, புல்லாங்குழல், தவில், மிருதங்கம், போன்ற கருவி இசைப்பேட்டியிலும், பரதநாட்டிய போட்டியிலும் அதிகபட்சம் 5 நிமிடம் நிகழ்ச்சி நடத்திட அனுமதிக்கப்படுவார்கள்.
கிராமிய நடனத்தில் கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், காளை ஆட்டம், மயிலாட்டம், கைச்சிலம்பாட்டம், மரக்கால் ஆட்டம், ஒயிலாட்டம், புலியாட்டம், தப்பாட்டம் (பறையாட்டம்) போன்ற பாரம்பரிய கிராமிய நடனங்கள் அனுமதிக்கப்படும்.
ஓவியப்போட்டியில் பங்கேற்பவர்களுக்கான ஓவியத் தாள்கள் வழங்கப்படும். அக்ரலிக் வண்ணம் மற்றும் நீர்வண்ணம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதனை பங்கேற்பாளர்கள் கொண்டுவரவேண்டும்.
நடுவர்களால் கொடுக்கப்படும் தலைப்பில் ஓவியங்கள் வரையப்பட வேண்டும். அதிக பட்சம் 3 மணி நேரம் அனுமதிக்கப்படுவார்கள்.
மாவட்ட போட்டியில் முதலிடம் பெறும் இளைஞர்கள் மாநில அளவிலான போட்டிக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.