குடியாத்தத்தில் சூறை காற்றுடன் ஆலங்கட்டி மழை
- மரம் விழுந்து கோவில் இடிந்தது
- போக்குவரத்து பாதிப்பு
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம் சுற்றுப்புற கிராமங்களில் இன்று அதிகாலை 2 மணி அளவில் பலத்த சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.
அப்போது வேகமான சூறாவளி காற்று வீசியது. அப்போது மின்தடை ஏற்பட்டது சுமார் ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழையால் குடியாத்தம் நகரில் காட்பாடி ரோட்டில் பல மரங்களும் நகரின் முக்கிய பகுதிகளான கொச அண்ணாமலை தெரு, ராஜாஜிதெரு உள்ளிட்ட தெருக்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து போக்குவரத்து தடை ஏற்பட்டது.
காமராஜர் பாலத்தில் ஒரு அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி இருந்தது தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது. இதுகுறித்து நள்ளிரவே தகவல் அறிந்ததும் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, நகர் மன்ற தலைவர் எஸ்.சௌந்தரராஜன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப் இன்ஸ்பெக்டர் யுவராஜ், நகர்மன்ற உறுப்பினர்கள் பி.மேகநாதன், எம்.எஸ். குகன் உள்பட நகராட்சி ஊழியர்கள், மின்வாரிய ஊழியர்கள், காவல்துறையினர் காட்பாடி ரோட்டில் விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி சாலையில் சாய்ந்த ராட்சத மரங்களை அகற்றினார்கள். மேலும் சாலையில் சரிந்து கிடந்த மின் கம்பங்களை ஒதுக்கி வைத்தனர்.
அதேபோல் கொச அண்ணாமலை தெரு, ராஜாஜி தெரு பகுதியில் சாய்ந்த மரங்களையும் ஜேசிபி எந்திரங்கள் மூலம் கொட்டும் மழையும் பொருட்படுத்தாமல் நகர மன்ற தலைவர் சௌந்தர்ராஜன் முன்னிலையில் அகற்றினார்கள்.
அதேபோல் குடியாத்தம்- சித்தூர் செல்லும் சாலையில் பாக்கம் பகுதியில் சாலையின் நடுவே இரு பக்கத்திலும் இருந்த ஏராளமான புளிய மரங்கள் சாய்ந்தன பாக்கம் கிராமத்தில் 15-க்கும் அதிகமான வீடுகளில் மீது மரங்கள் சாய்ந்தன.
பாக்கம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இருந்த 4 மரங்கள் சாய்ந்து சுற்று சுவரை சேதப்படுத்தியது. ஏராளமான மின்கம்பங்களை சாய்த்தது தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு நள்ளிரவே விரைந்து வந்த குடியாத்தம் உதவி கலெக்டர் வெங்கட்ராமன், ஒன்றிய குழு தலைவர் என்.இ. சத்யானந்தம், தாசில்தார் விஜயகுமார், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயபாரதி மணவாளன், ஒன்றிய குழு உறுப்பினர் சுரேஷ்குமார் உள்பட மின்வாரிய ஊழியர்கள், காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர், கிராம மக்கள் ஏராளமானோர் மீட்பு பணியில் ஈடுபட்டனர் பல மணி நேரம் ஜேசிபி எந்திரங்கள் கொண்டு சாலையில் கிடந்த மரங்களை அப்புறப்படுத்தினர்.
25-க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் சேதமடைந்த மின் கம்பங்களையும் மின்கம்பிகளையும் கடும் சிரமத்திற்கிடையே கொட்டும் மழையில் அப்புறப்படுத்தினர்.
அதேபோல் குடியாத்தம் பலமநேர் சாலையில் சாய்ந்த மரங்களையும் ஜேசிபி எந்திரங்கள் கொண்டு அகற்றினார்கள். 4 மணிநேரத்திற்கு பிறகு போக்குவரத்து சீரானது, குடியாத்தம் சித்தூர் சாலையில் 3 மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து சீரானது குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் திரும்பிய திசையெல்லாம் மரங்களும் சாய்ந்தும், வீடுகளுக்கு பெருத்த சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கனமழையால் குடியாத்தம் ஒன்றிய பகுதியில் மட்டும் 50க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் ஆகியிருக்கும் என கூறப்படுகிறது.
கோவில் இடிந்தது
குடியாத்தம் அடுத்த உப்பரப்பள்ளி கிராமத்தில் மரம் சாய்ந்து விழுந்ததில் கோவில் இடிந்தது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
ஒரு மணி நேரம் கொட்டிய சூறை காற்று கனமழையால் பல இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 2 மணி முதல் காலை 10 மணி வரை மின்சாரம் வரவில்லை மின்சாரம் வர இன்னும் பல மணி நேரம் ஆகும் எனவும் சில கிராமப்புற பகுதிகளில் சில நாட்கள் ஆகும் எனவும் கூறப்படுகிறது.
வேலூர்
வேலூரில் நேற்று இரவு சுமார் 2 மணியளவில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து லேசான மழை பெய்ய தொடங்கியது. படிப்படியாக மழையின் அளவு அதிகரித்து இடி, மின்னலுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. வேலூர், காட்பாடி, சத்துவாச்சாரி, வேலப்பாடி, சாய்நாதபுரம், சங்கரன் பாளையம், தொரப்பாடி, பாகாயம், கொணவட்டம் உள்ளிட்ட இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.
மழை அளவு. மி.மீட்டரில் வருமாறு:-
வேலூர் 21.8, காட்பாடி 23, குடியாத்தம் 52, பேர்ணாம்பட்டு 1.5, கே.வி.குப்பம் 43, பொன்னை 19.
குடியாத்தம் பகுதியில் விவசாயிகள் ஏராளமான ஏக்கரில் தென்னை மரங்களை வைத்துள்ளனர். மேலும் வாழை மரங்களும் நெற்பயிர்களும், மா மரங்களும் ஏராளமாக உள்ளன இன்று அதிகாலை அடித்த சூறைக்காற்றால் பாக்கம், சேம்பள்ளி, உப்பிரபல்லி, தட்டப்பாறை, பரதராமி, சைனகுண்டா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சாய்ந்தன நூற்றுக்கணக்கான தென்னை மரங்கள் சாய்ந்தன. ஏராளமான மாமரங்களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டது இந்த மழையால் பல லட்சம் ரூபாய் அளவில் விவசாயிகளுக்கு சேதம் ஏற்படுத்தியிருக்கும் என கூறப்படுகிறது.