4 அரசு பஸ்களை சிறைபிடித்து கிராம மக்கள் முற்றுகை போராட்டம்
- திருமங்கலம் அருகே 4 அரசு பஸ்களை சிறைபிடித்து கிராம மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
- ஒரு மாத காலமாக முறையாக இயக்கப்படவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டது.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி.கொக்குளம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கிருந்து நாள்தோறும் நூற்றுக்க ணக்கானோர் மதுரை, திருமங்கலம் உள்ளிட்ட நகரங்களுக்கு அரசு பஸ்களில் சென்று வருகின்றனர். மேலும் மாணவ, மாணவிகளும் பள்ளிக்கு செல்ல அரசு பஸ்களையே நம்பியுள்ளனர்.
மதுரை பெரியார் பேருந்து நிலையத்திற்கு தினமும் காலை, மதியம், மாலை என 3 வேளை டி.கொக்குளம் கிராமத்திற்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக காரியாபட்டி பேருந்து பணிமனைக்கு உட்பட்ட டி.கொக்குளம் கிராமத்திலிருந்து மதுரை அண்ணா பஸ் நிலையத்திற்கு செல்லும் அரசுப் பேருந்து முறையாக இயக்கப்ப டவில்லை. தினமும் காலை நேரத்தில் வரக்கூடிய பேருந்து உரிய நேரத்திற்கு வராமல் தொடர்ந்து கால தாமதமாக வருவதால் வேலைக்கு செல்வோர் பள்ளி கல்லூரிகளுக்கு செல்வோர் பாதிக்கப் பட்டனர்.
மேலும் மாலை வேளையில் பஸ்கள் வருவதில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். இதுகுறித்து பலமுறை போக்குவரத்து அலுவலர்களிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் இன்று காலை கிராமத்திற்கு வந்த திருமால், புதுப்பட்டி, கிருஷ்ணாபுரம் பகுதிகளில் இருந்து பெரியார் பஸ் நிலையம் செல்லும் அரசு பஸ்சை சிறை பிடித்தனர். தொடர்ந்து அடுத்தடுத்து திருமங்கலம் பகுதியில் இருந்து காரியாபட்டி செல்லும் அரசு பஸ், மதுரையில் இருந்து தூம்பக்குளம் செல்லும் அரசு பஸ் என 4 பஸ்களையும் சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
தகவலறிந்த கூடக்கோவில் போலீசார் மற்றும் போக்குவரத்து துறை அலுவலர்கள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தினந்தோறும் காலை மாலை உரிய நேரத்திற்கு பேருந்து வரும் என எழுதி என உறுதி அளித்தனர். அதன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.