வறண்டு வரும் வீராணம் ஏரி: சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல்
- வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது.
- அணையின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும். தற்போது வீராணம் ஏரியில் 41.70 அடி தண்ணீரே உள்ளது.
கடலூர்:
வீராணம் ஏரி வறண்டு வருவதால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. மேலும் இந்த ஏரியை சுற்றி உள்ள பல ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதியை பெற்று வருகிறது. கோடை வெப்பம் காரணமாக தற்போது வீராணம் ஏரி வறண்டு வருகிறது. இன்று காலை 6 மணி நிலவரப்படி வீராணம் ஏரியில் 41.70 அடி தண்ணீரே உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும். அணைக்கு நீர்வரத்து இல்லை.
அணையின் நீர் மட்டம் குறைந்து வருவதால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணை திறந்து காவிரியில் தண்ணீர் வந்தால் தான் வீராணம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிக்கும். அல்லது டெல்டா பகுதிகளில் மழை பெய்தால் மட்டுமே ஏரிக்கு நீர் வரும். ஏரி வறண்டு வருவதால் வெளிநாட்டு பறவைகள் இங்கு அதிகம் வர தொடங்கி உள்ளன. அவைகள் ஏரியில் உள்ள மீன்களை பிடித்து தின்று வருகிறது. வீராணம் ஏரி வறண்டு வருவதால் அப் பகுதி விவசாயிகள் கவலையில் உள்ளனர்.