புகழ் பெற்ற கோவில்களுக்கு செல்ல ஆன்மீக சுற்றுலா ரெயில்
- புகழ் பெற்ற கோவில்களுக்கு செல்ல ஆன்மீக சுற்றுலா ரெயில் மே 4-ந் தேதி இயக்கப்படுகிறது.
- சுற்றுலா செல்ல விருப்பமுள்ளர்வர்கள் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பயன்பெறலாம்.
விருதுநகர்
ஐ.ஆர்.சி.டி.சி. தென் மண்டலப் பொது மேலா ளர் ரவிக்குமார், தெற்கு ரெயில்வே அதிகாரி வெங்கட சுப்பிரமணியன், தென் மண்டல சுற்றுலா பொது மேலாளர் சுப்பிர மணி ஆகியோர் விருது நகரில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்தாண்டு ஜூலை மாதம் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக பாரத் கவுரவ் விரைவு ரெயில் இயக்கப்பட்டது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
ரெயில்வே நிர்வாகம், ஐ.ஆர்.சி.டி.சி. இணைந்து இந்தச் சிறப்பு ரெயிலை இயக்குவதால், சுற்றுலா சென்று வருவதற்கான செலவு குறைகிறது. இந்த ஆன்மீக சுற்றுலாவில் ஒரு நபருக்கு ரெயில் கட்டணம், தங்கும் அறை, கோவிலுக்குச் சென்று வருவதற்கான கட்டணம் என ரூ.20 ஆயிரத்து 367 செலுத்த வேண்டும்.
குளிர்சாதனப் பெட்டியில் பயணம் செய்வோருக்கு கட்டணம் ரூ.35 ஆயிரத்து 651 ஆகும். இவர்களுக்கு தங்கும் அறை, வாகனம் ஆகியவை குளிர்சாதனத்துடன் வழங்கப்படும். மேலும் 5 முதல் 11 வயதுள்ள குழந்தைகளுக்கு கட்டணச் சலுகை உண்டு.
வருகிற மே 4-ந் தேதி கேரள மாநிலம் கொச்சு வேலியில் இருந்து புறப்படும் இந்த சுற்றுலா சிறப்பு ரெயில் செங்கோட்டை, விருதுநகர் வழியாக தஞ்சை, சென்னை வழியாக, வட மாநிலத்தில் உள்ள பூரி, கோனார்க், கொல்கத்தா, கயா, வாராணசி, திரிவேணி சங்கமம் ஆகிய சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று திரும்ப உள்ளது.
இந்த ரெயிலில் 4 குளிர்சாத னப் பெட்டிகள், 7 படுக்கை வசதி பெட்டிகள் இருக்கும். வட மாநில கோவில்களுக்கு 10 நாட்கள் சுற்றுலா செல்ல விருப்பமுள்ளர்வர்கள் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பயன்பெறலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.