கோவில் விவகாரங்களில் அறநிலையத்துறை தலையிடக்கூடாது
- கோவில் உள்விவகாரங்களில் அறநிலையத்துறை தலையிடக்கூடாது என ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் பேட்டியளித்தார்.
- விதிமீறலில் ஈடுபடும் அதிகாரிகள் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் சடகோபராமானுஜ ஜீயர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஸ்ரீரங்கம் ரங்க நாதர்கோவிலில் ராமானுஜர் ஏற்படுத்திய வழிபாட்டு முறைகளை, அறநிலையத்துறை அதிகாரிகள் மாற்றி அமைத்துள்ளனர். தென் ஆச்சாரிய சம்பிரதாயம் உள்ள கோவில்களில் மரபு மீறப்பட்டு வருகிறது.
கோவில் நிர்வாகம் சிறப்பாக நடைபெற அறநிலையத்துறை ஒத்துழைப்பு அளித்தாலும், சில அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படு கின்றனர். கோவில் உள் விவகாரங்களில் தலையிட அறநிலையத்துறைக்கு அதிகாரம் இல்லை.
ஆனால் ஸ்ரீரங்கம்கோவிலில் உற்சவ நாட்களில் விஸ்வரூப தரிசனம் தடை, பெருமாளுக்கு நைவேத்யம் செய்வதில் மாற்றம் செய்து முன்பு செயல் அலுவலராக இருந்த ஜெயராம், விதிமு றைகளை திருத்தி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுபோன்று சில அதிகாரிகள் செய்யும் தவறால் தமிழக அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது.
கோவில் நிலங்கள் மீட்பு நடவடிக்கைகளை வரவேற்கிறோம். விதிமீறலில் ஈடுபடும் அதிகாரிகள் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அறநிலை யத்துறை தவறுகளை அரசுக்கு சுட்டிக்காட்டும் வகையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வருகிற 5-ந் தேதி நடைபெறும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தென்னிந்திய பார்வர்டு பிளாக் தலைவர் திருமாறன், பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, முத்தரையர் சங்க தலைவர் செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.