- பால்பண்ணை ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
- இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் திரு முக்குளம் அருகே கூட்டுறவு பால் பண்ணை உள்ளது. இங்கு ஏராளமான ஊழி யர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இங்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ரைட்டான்பட்டி பகுதியைச் சேர்ந்த சேவுகன் (வயது57) என்பவரும் தற்காலிக பணியாளராக வேலை பார்த்து வந்தார்.
இவர் சரிவர வேலைக்கு வராமல் இருந்ததால் சஸ்பெண்டு செய்யப் பட்டதாக கூறப்படுகிறது. மீண்டும் வேலையில் சேர்த்து கொள்ளும்படி கேட்பதற்காக பால் பண்ணைக்கு சேவுகன் சென்றார். அப்போது உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று வேலையில் சேரும் படி சக ஊழியர்கள் கூறியுள்ளனர்.
அதன்படி மேலாளரை சந்திப்பதற்காக சேவுகன் சென்றார். அப்போது அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பால் பண்ணை முன்பு சேவுகன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீவில்லி புத்தூர் துணை சூப்பிரண்டு முகேஷ் ஜெயக்குமார் இன்ஸ்பெக்டர் முத்துக் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
சேவுகனின் உடலை கைப்பற்றி பிரயோத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சேவுகனின் மகன் தங்க திருப்பதி ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார்.
அதில் மேலாளர் சிவனான், ஊழியர்கள் ராம்குமார், நாராயணன், முனியசாமி ஆகியோர் சேர்ந்து தந்தையை அடித்துக் கொலை செய்ததாக கூறியிருந்தார். அதன்பேரில் இந்த வழக்கை போலீசார் கொலை வழக்கமாக மாற்றி சிவனான் உள்பட 4 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.