பேராசிரியர்களுக்கான மேம்பாட்டு நிகழ்ச்சி
- காளீஸ்வரி கல்லூரியில் பேராசிரியர்களுக்கான மேம்பாட்டு நிகழ்ச்சி நடந்தது.
- இதில் 153 பேராசிரியர்கள் பங்கேற்று பயன்பெற்றனர்.
சிவகாசி
சிவகாசி, காளீஸ்வரி கல்லூரியின் உளதர உத்தரவாத அமைப்பின் சார்பில் "நேரம் மற்றும் அழுத்தத்தை கையாளும் முறைகள்" குறித்த ஆசிரியர் மேம்பாடு நிகழ்வு நடந்தது. முதல்வர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.
ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மின்னணுவியல் துறையின் இணைப் பேராசிரியர் கவுதமன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
அவர் பேசுகையில், நேரத்தையும் அழுத்தத்தையும் சரிவர கையாளும் முறைகள் குறித்து விளக்கினார். வேலையின் முக்கியத்துவம், அவசரம் ஆகியவற்றை உணர்ந்து செயல்பட வேண்டும். அவசரகதியில் வேலை செய்யாமல் நிதானமாக பணி புரிந்தால் சிறப்பாக அமையும்.
குறிக்கோள்களை அடைவதற்கு நேரமேலாண்மை முக்கியம் ஆகும். அன்றன்று செய்ய வேண்டியவற்றை அன்றே செய்து முடிக்க வேண்டும்.
நமது உடம்பில் அட்ரினலின் வேதிப்பொருள் சுரப்பதால் அழுத்தம் உண்டாகிறது. அழுத்தம் உண்டாவதால் உடல், மனம். குணம் ஆகியவற்றில் மாற்றம் ஏற்படும். மனநலத்தை சீராக வைத்திருக்க தினமும் சிறு உடற்பயிற்சி செய்ய வேண்டும். தியானம் மற்றும் நல்லுறக்கம் மிகவும் முக்கியம் என்றார்.
உள்தர உத்தரவாத அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரியா வரவேற்றார். துணை முதல்வர்கள் பாலமுருகன், முத்துலட்சுமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தகவல் தொழில்நுட்பவியல் துறைத் தலைவர் பாலாஜி நன்றி கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் 153 பேராசிரியர்கள் பங்கேற்றுப் பயன்பெற்றனர்.