உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கில் வளர் இளம்பருவத் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு நிதிக்கான காசோலையை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கணேசன் ஆகியோர் வழங்கினர். அருகில் கலெக்டர் மேகநாதரெட்டி, அசோகன் எம்.எல்.ஏ. உள்ளனர்.

ரூ.150 கோடியில் நவீன வசதிகளுடன் இ.எஸ்.ஐ. மருத்துவமனை

Published On 2022-12-13 07:24 GMT   |   Update On 2022-12-13 07:24 GMT
  • சிவகாசியில் ரூ.150 கோடியில் நவீன வசதிகளுடன் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது.
  • இந்த தகவலை அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம், ஆமத்தூரில் பட்டாசு தொழிற்சாலைகள் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் நலன் குறித்த கருத்தரங்கு நடந்தது.தொழிலாளர் நலத்துறை முதன்மைச் செயலாளர் அதுல் ஆனந்த் தலைமை தாங்கினார்.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசிமுதீன் விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி, எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், அசோகன், ரகுராமன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் முன்னிலை வகித்தர்.

அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, சி.வி.கணேசன் ஆகியோர் கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். இதில் தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் மூலம் தொழிற்சாலையில் இருந்து மீட்கப்பட்ட 5 வளர் இளம் பருவத் தொழிலாளர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் மதிப்பிலும், 1 வளர் இளம் பருவத் தொழிலாளிக்கு ரூ.20 ஆயிரம் என மொத்தம் ரூ.1 லட்சத்து 45ஆயிரம் மதிப்பிலான மறுவாழ்வு நிதிக்கான காசோலையை அமைச்சர்கள் வழங்கினர்.

அமைச்சர் கணேசன் பேசியதாவது:-

எதிர் காலத்தில் பட்டாசு விபத்துக்களை தடுக்கும் வகையில் விரைவான நடவடிக்கை எடுப்பதற்கு கலெக்டர் தலைமையிலான குழுக்கள் விரைந்து செயல்படும். தமிழ்நாட்டிலேயே விருது நகர் மாவட்டத்தில் அதிக பட்டாசு தொழிற்சாலைகள் இருக்கின்றன. சுமார் 56 ஆயிரம் பட்டாசுத் தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள்.

விருதுநகர் மாவட்டத்தில் ஏற்படும் பட்டாசு விபத்துக்களை தடுப்பது மட்டுமல்லாமல், தொழிலாளர்களை காப்பற்றுவதற்கும் சிவகாசியில் அரசு தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி சுமார் ரூ.150 கோடி மதிப்பீட்டில், நவீன வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது.

இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி மத்திய அரசிடம் ஒப்புதல் பெறுவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

விபத்தில்லா பட்டாசு தொழில்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, சென்னையில் ஆய்வு கூட்டம் நடந்தது. அதன் விளைவாக இந்த கருத்தரங்கு நடத்தப்படுகிறது.ஆபத்து என்று தெரிந்தும் மக்கள் வறுமை காரணமாக இந்த தொழிலை செய்து வருகின்றனர். அவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், கடமையையும் தமிழக அரசுக்கும், பட்டாசு தொழிற்சாலைகள் உரிமையாளர்களுக்கும் உண்டு.

இதுவரை தொழிலா ளர்களுக்கு பயிற்சி நிறுவனம் உருவாக்கப்பட்டு அதன் மூலம் 35 ஆயிரத்து 961 தொழிலாளர்களுக்கு, எவ்வாறு பாதுகாப்பாக பணியாற்றவேண்டும் என்ற பயிற்சி அளிக்கப்பட்டு ள்ளது. பட்டாசு விபத்து குறித்து 1241 வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 800 பட்டாசு ஆலைகளில் இதுவரை ஒரு விபத்து கூட ஏற்படவில்லை. விபத்தில்லா பட்டாசு நடக்கும் ஆலைகள் பின்பற்றும் வழிமுறைகளை மற்ற தொழிற்சாலைகள் வழிகாட்டியாக கொண்டு செயல்பட்டு விபத்துக்களை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News