விரைவு தபால், பதிவு தபால், பார்சல் சேவை இரவு 8 மணி வரை நீட்டிப்பு
- விரைவு தபால், பதிவு தபால், பார்சல் சேவை இரவு 8 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- விரைவு தபால்களுக்கு 50 கிராம் வரை ரூ.41 கட்டணமாக பெறப்பட்டு மறுநாள் காலையில் தமிழகத்திற்குள் அந்தந்த முகவரியில் போய் சேரும் என்று தபால் துறையினர் தெரிவித்தனர்.
ராஜபாளையம்
தமிழகம் முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் மதியம் 3 மணி வரை சேவைகள் இருந்தன. பின்னர் தனியார் கூரியர் சேவை தொடங்கப்பட்டு அபரிதமான வளர்ச்சி கண்டது. இதன் காரணமாக மத்திய அரசின் அஞ்சலக சேவைகளில் சுணக்கம் ஏற்பட்டது.
மதியம் 3 மணி வரை பதிவு தபால், விரைவு தபால் மற்றும் பார்சல் சேவைகள் இருந்து வந்த நிலையில் தனியார் கூரியர் சேவைகளில் இரவு 8 மணி வரை பார்சல் பெறப்பட்டு, மறுநாள் காலை போய் சேரும் நிலை இருந்தது.
இதன் காரணமாக தபால் நிலையங்களில் கூட்டம் குறைந்து பொதுமக்கள் தனியார் கூரியர் சேவையை பயன்படுத்த தொடங்கினர். இதனால் அஞ்சலக சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. விருதுநகர் மாவட்டம் விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம் ஆகிய தலைமை தபால் நிலையங்களில் இரவு 8 மணி வரை பதிவு தபால், விரைவு தபால் மற்றும் பார்சல் சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ராஜபாளையம் தலைமை தபால் நிலைய அலுவலகத்தில் துணை கோட்ட கண்காணிப்பாளர் கண்ணன் இந்த சேவையை தொடங்கி வைத்தார். தலைமை அஞ்சலக அதிகாரி சண்முகராஜ் வரவேற்றார். இதில் அஞ்சலக அலுவலர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.
விரைவு தபால்களுக்கு 50 கிராம் வரை ரூ.41 கட்டணமாக பெறப்பட்டு மறுநாள் காலையில் தமிழகத்திற்குள் அந்தந்த முகவரியில் போய் சேரும் என்று தபால் துறையினர் தெரிவித்தனர்.