உள்ளூர் செய்திகள்

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள ஏலக்காய் தோட்டம்.

ஏலக்காய் விவசாயம் செய்ய முடியாமல் வாழ்வாதாரம் இழந்த விவசாயிகள்

Published On 2023-02-10 09:27 GMT   |   Update On 2023-02-10 09:27 GMT
  • ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் ஏலக்காய் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.
  • மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.

ராஜபாளையம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் 15-க்கும் மேற்பட்ட ஏலக்காய் தோட்டங்கள் உள்ளன. சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த தோட்டங்கள் தேவியாறு, காவு, நகரை யாறு, பச்சையாறு குளிராட்டி, சேத்தூர், பூலாமலை, கோட்டமலை உள்பட 15-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ளன.

இந்த தோட்டங்களில் பிரதானமாக ஏலக்காய் பயிரிடப்பட்டு வருகிறது. இதுதவிர காப்பி, மிளகு, கிராம்பு போன்றவைகளும் பயிரிடப்பட்டு வருகிறது. கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த தோட்டங்கள் மிகவும் அதிகமான ஏலக்காயை உற்பத்தி செய்து விருதுநகர் உள்பட பல்வேறு சந்தைகளுக்கு அனுப்பி வைத்து வந்தனர்.

ஏலக்காய் தோட்டங்களில் நூற்றுக்கணக்கான தொழி லாளர்கள் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தனர். ராஜபாளையத்தை தலைமை இடமாக கொண்டு ஏலக்காய் வாரியம் செயல்பட்டு வந்தது. பின்னர் அது ஸ்பைசஸ் போர்டு என்று மாற்றப்பட்டது. ஏலக்காய் விவசாயிகளுக்கு தொழில் நுட்ப ஆலோசனைகள், மானிய விலையில் உரம், பூச்சி மருந்துகள் மற்றும் உபகரணங்கள் வழங்கி சிறப்பாக செயல்பட்டு வந்தது.

மேற்கு தொடர்ச்சி மலையை முதலில் சாம்பல் நிற அணில் சரணாலயமாக மாற்றி ஏலக்காய் தோட்டத்திற்குள் தொழிலாளர்கள் மற்றும் யாரும் உள்ளே நுழையாதபடி வனத்துறையினர் கெடுபிடி செய்து வந்தனர். அதன் பின்னர் தற்போது மேகமலை புலிகள் சரணாலயமாக மாற்றப்பட்டு யாருமே உள்ளே நுழைய முடியாத அளவிற்கு வனத்துறையினர் கடுமையாக சட்ட திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக ஏலத் தோட்டத்திற்குள் உரிமையாளர்கள் சென்று பார்க்கவோ தொழிலாளர்களை வைத்து வேலை செய்யவோ இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது தவிர ஏலக்காய் தோட்டத்திற்குள் முன்பு பாதுகாப்புடன் செல்வதற்கு இருந்து வந்த நிலை மாறி தற்போது 2பேர் அல்லது 3 பேர் மட்டும் செல்ல அனுமதி கிடைத்து வருவதால் வழியில் கரடி, யானைகள் மற்றும் பாம்பு குறுக்கிடுவதால் உள்ளே செல்ல மக்கள் அஞ்சுகிறார்கள். மேலும் மிகவும் கடினமான சூழலில் 7 முதல் 8 கி.மீட்டர் வரை மலை மீது ஏறி சென்று விவசாய பணிகளை செய்வதற்கு வேலையாட்கள் கிடைப்பதில்லை.

ஏலக்காய் தோட்டங்களில் விளையும் பொருட்களை கீழே கொண்டு வருவதற்கு சுமந்து வருவதை தவிர வேறு எந்த வழியும் இல்லை. இதன் காரணமாக ஏல தோட்டங்கள் மிகவும் நலிவடைந்து காணப்ப டுகின்றன. புதர் மண்டி கிடக்கும் அவலம் நிலவுகிறது. களை எடுத்தல், பூச்சி மருந்து அடித்தல் போன்ற பணிகளை செய்யஆட்கள் கிடைக்காத நிலை தொடர்கிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக யானை கூட்டங்கள் ஏலக்காய் தோட்டத்திற்குள் புகுந்து ஏலச் செடிகளை நாசம் செய்தும், அங்குள்ள இதர குடியிருப்பு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள அரிசி போன்ற உணவுப் பொருட்களை நாசம் செய்தும் வருவதால் தொழிலாளர்கள் யாரும் அங்கு தங்குவதற்கு முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்பைசஸ் போர்டு இங்கிருந்து மாற்றப்பட்டு போடி கொண்டு செல்லப்பட்டது.

இங்குள்ள ஏலத்தோட்ட விவசாயிகள் ஆலோசனை பெறுவதற்கு நேரடியாக பார்வையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கவும் இயலாத நிலை தற்போது உள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள விவசாயிகளின் ஏலத் ேதாட்ட விவசாயத்தை பாதுகாக்கவும், அதை மேம்படுத்த உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று ஏலத்தோட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News