உள்ளூர் செய்திகள்

கண்மாய்கள் மராமத்து பணிக்கு ஜே.சி.பி. எந்திரங்கள்

Published On 2023-04-04 08:29 GMT   |   Update On 2023-04-04 08:29 GMT
  • விருதுநகரில் கண்மாய்கள் மராமத்து பணிக்கு ஜே.சி.பி. எந்திரங்களுக்கான உடமை ஆவணங்களை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
  • இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கண்மாய்கள் மராமத்து, வரத்து கால்வாய்கள் தோண்டுதல், தனியார் நிலங்களில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றுதல், பண்ணை குட்டைகள் அமைத்தல் போன்ற பணி களை செய்வதற்கு ரூ72 லட்சம் மதிப்பில் இண்டஸ் இன்ட் வங்கி-பிரதான் மாவட்ட திட்டத்தின் கீழ் 2 ஜே.சி.பி எந்திரங்களுக்கான உடமை ஆவணங்களை கலெக்டர் ஜெயசீலன் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு வழங்கி விவசாயிகளின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

விருதுநகர் மாவட்டம் முன்னேற விழைகிற மாவட்டங்களில் ஒன்றாக இருக்கிறது. அதனடிப்படையில் இண்டஸ் இன்ட் வங்கி-பிரதான் மாவட்ட திட்டம் விருதுநகர் மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் 2022 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கண்மாய்கள் மராமத்து, வரத்துக்கால்வாய்கள் தோண்டுதல், தனியார் நிலங்களில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றுதல், பண்ணைக் குட்டைகள் அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. இனிவரும் காலங்களில் மேற்குறிப்பிட்ட பணிகளை செய்வதற்கு ரூ.72லட்சம் மதிப்பில் இண்டஸ் இன்ட் வங்கி- பிரதான் மாவட்ட திட்டத்தின் கீழ் 2 ஜே.சி.பி. எந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள விவசாயிகள், விவசாயிகள் சங்கங்கள் பிரதான் நிறுவனத்திற்கு, 115/5A-மாருதி நகர், கச்சேரி ரோடு, விருதுநகர் - 626,001 என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது 94451-23288 வாட்ஸ்-அப் எண்ணுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பிரதான் நிறுவன அணி தலைவர் சீனிவாசன், பொறியியல் ஒருங்கி ணைப்பாளர் கனகவள்ளி, வேளாண் ஒருங்கிணைப்பாளர் ஆதிநாராயணன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News