- ஜே.சி.பி. வாகனம் எரிந்து சேதம்
- கீழ ராஜகுலராமன் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ராஜபாளையம்
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள அடைக்கலபுரத்தைச் சேர்ந்தவர் மாரிச்சாமி (வயது 39). ஜே.சி.பி. வாகனத்தை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். கலிங்கப்பட்டியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் இவரது ஜே.சி.பி. வாகனத்தின் ஆப்பரேட்டராக உள்ளார். சம்பவத்தன்று ராஜபாளையம் அருகே உள்ள மூக்கரநத்தம் பகுதியில் உள்ள செந்தட்டிக் காளை என்பவருக்கு சொந்தமான வயல் காட்டில் ஜே.சி.பி. உதவியுடன் முள் செடிகளை அப்புறப்படுத்தும் பணியில் கருப்பசாமி ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஒரு மேட்டில் சென்றபோது ஜே.சி.பி. வாகனம் பழுதாகி நின்று விட்டது. இதையடுத்து மெக்கானிக்கை அழைத்து வருவதற்காக கருப்பசாமி சென்றார்.
அப்போது அருகே உள்ள சோளக்காட்டில் வெப்பத்தின் காரணமாக தீப்பிடித்துள்ளது. சிறிது நேரத்தில் காற்றின் வேகத்தில் தீ பரவி ஜே.சி.பி. வாகனத்தில் தீப்பிடித்தது. அந்த வழியாக வந்தவர்கள் அதனைப் பார்த்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சங்கரன்கோவில் மற்றும் வெம்பக்கோட்டை பகுதியில் இருந்து இரண்டு வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் ஜே.சி.பி. வாகனம் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.
தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் ஜே.சி.பி. வாகனம் முழுமையாக எரிந்து சேதமானது. இது குறித்து மாரிச்சாமி கொடுத்த புகாரின் பேரில் கீழ ராஜகுலராமன் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.