மாணவர்களை நேரில் சென்று வரவேற்ற எம்.எல்.ஏ.
- மாணவர்களை நேரில் சென்று தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வரவேற்றார்.
- இந்தியாவிலேயே கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் முதல்வர் தமிழக முதல்வர் தான் எனக்கூறினார்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதியில் கோடை விடுமுறை முடிந்து அரசு பள்ளிகளுக்கு வருகை புரிந்த மாணவ- மாணவிகளை வகுப்பறைகளுக்கு நேரில் சென்று தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வரவேற்றார். அவர்களுக்கு காலை வணக்கம் கூறி நன்றாக படித்து முன்னுக்கு வாருங்கள் என வாழ்த்தி உற்சாகப்படுத்தினார்.
ராஜபாளையம் ரெயில்வே பீடர் ரோட்டில் உள்ள சேத்தூர் சேவுகப்பாண்டியனார் அரசு மேல்நிலைப்பள்ளிக்கும், மேலப்பாட்டகரிசல்குளம் ஊராட்சி திருவள்ளுவர் நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கும் சென்று மாணவர்களை சந்தித்து வாழ்த்து கூறி அனைவரும் நன்றாக படிக்க வேண்டும் என்று கூறினார்.
மாணவர்களை சந்திக்க வகுப்பறைக்கு செல்லும்போது வகுப்பில் போதிய வெளிச்சம் இல்லாதை அறிந்து சொந்த செலவில் வகுப்பறைக்கு தேவையான மின்விளக்கு, மின்விசிறி வசதி விரைவில் செய்துதரப்படும்எனக்கூறினார்.
பள்ளிக்கு என்னென்ன வசதி வேண்டுமென மாணவர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களிடம் கேட்கையில் 9,10-ம் வகுப்பு மாணவர்கள் சீருடை வேண்டுமென கூறினர். ஏழை எளிய மாணவர்களுக்கு தலைமை ஆசிரியரின் பரிந்துரையின்படி சீரூடை வழங்கப்படும் என்று எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
மேலும் தலைமை ஆசிரியர் பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு கருவியும், மாணவர்கள் இருக்கை வசதியும் வேண்டுமென கோரிக்கை விடுத்தார். சட்ட மன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனக்கூறினார்.
அதனைத்தொடர்ந்து பேசிய அவர் , மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்க எந்தெந்த மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை என கண்டறிந்து அவர்களது வீட்டிற்கே சென்று படிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்லி அவர்களை பள்ளிக்கு அழைத்து வர வேண்டுமென தலைமை ஆசிரியரிடம் கேட்டுக் கொண்டார். இந்தியாவிலேயே கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் முதல்வர் தமிழக முதல்வர் தான் எனக்கூறினார்.
மேலும் திருவள்ளுவர் நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பில் ராக்கேஷ் என்ற மாணவரை தமிழின் இனிமைப் பாடலை வாசிக்கச் சொல்லி வாசிப்பு திறனை கேட்டறிந்தார். குழந்தைகளுக்கு புதிய புத்தகங்களை வழங்கினார்.
இந்த நிகழ்வில் தலைமை ஆசிரியர்கள் குணசீலன்,ஜெயலட்சுமி தி.மு.க. நகர செயலாளர் (வடக்கு) மணிகண்டராஜா, ஒன்றிய துணை சேர்மன் துரைகற்பகராஜ், கிளை செயலாளர் அங்குராஜ் மற்றும் நிர்வாகிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.