- நரிக்குடி வாரச்சந்தையில் நடமாடும் ஏ.டி.எம். எந்திரம் செயல்படுகிறது.
- சந்தைக்கு வரும் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இங்கு அரசு மருத்துவமனை, வங்கிகள் மற்றும் யூனியன் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நரிக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பொது மக்களின் நெடுங்கால கோரிக் கையை நிறைவேற்றும் வகையில் கடந்த மாதம் 29-ந் தேதியன்று வாரந்தோறும் வியாழக்கிழமை யன்று செயல்படும் வகையில் நரிக்குடியில் புதிய வாரச்சந்தை யை தொடங்கி வைத்து நரிக்குடி ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.
இதனையடுத்து கடந்த சில வாரங்களாக பொதுமக்கள் நரிக்குடி வாரச்சந்தையில் காய்கறிகள், பழங்கள் மற்றும் வீட்டுக்கு தேவையான மளிகை சாமான்கள் உள்ளிட்ட அனைத்து விதமான அத்தியாவசிய பொருட்களையும் குறைந்த விலையில் வாங்கி சென்று பயனடைந்து வருகின்ற னர். இந்த நிலையில் நரிக்குடி வாரச்சந்தைக்கு வரும் பொதுமக்களின் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கான பண தேவையை பூர்த்தி செய்யும் வகையில் விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் நடமாடும் ஏ.டி.எம். வாகனம் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் சந்தைக்கு வரும் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.