சமுதாயத்தை அறிவார்ந்த நிலைக்கு உயர்த்துவதில் வாசிப்பு பழக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது-அமைச்சர்கள் பேச்சு
- விருதுநகரில் புத்தக கண்காட்சி வருகிற 27-ந் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது.
- சமுதாயத்தை அறிவார்ந்த நிலைக்கு உயர்த்துவதில் வாசிப்பு பழக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது என விழாவில் அமைச்சர்கள் பேசினர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் முதன்முறையாக மாவட்ட நிர்வாகமும், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமும் இணைந்து விருதுநகர் கே.வி.எஸ்.மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பொருட்காட்சி மைதா னத்தில் நேற்று புத்தக திருவிழா தொடங்கியது.
இந்த புத்தக கண்காட்சி வருகிற 27-ந் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது. முதலாவது விருதுநகர் புத்தக கண்காட்சியின் தொடக்க விழா நடந்தது. கலெக்டர் மேகநாதரெட்டி, எம்.எல்.ஏ.க்கள் விருதுநகர் சீனிவாசன், ராஜபாளையம் தங்கப்பாண்டியன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் முன்னிலை வகித்தனர்.அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் புத்தக கண்காட்சியை தெடாங்கி வைத்தனர். பின்னர் அவர்கள் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் சமுதாயத்தை அறிவார்ந்த நிலைக்கு உயர்த்துவதில், புத்தக வாசிப்பு முக்கிய பங்குவகிக்கிறது. எனவே, பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே புத்தக வாசிப்புப் பழக்கத்தை ஊக்கப்படுத்த வேண்டும்.
புத்தக வாசிப்பை மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்ல சென்னை புத்தகக்காட்சி போன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், இலக்கிய சிந்தனைமிக்க தமிழ் மொழியின் இலக்கிய மரபுகளைக் கொண்டாடும் வகையில் புத்தகக் காட்சிகள் மற்றும் இலக்கியத் திரு விழாக்கள் நடத்தப்படும் என முதல்வர் அறிவித்தார்.
அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் முதல் முறையாக மாபெரும் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது.
இதில் 100-க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள், மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்பு திட்டங்கள் தொடர்பான கண்காட்சிகள், தொல்லியல் துறை மூலம் வெம்பக்கோட்டை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் கண்காட்சி மற்றும் சிறுவர்கள் விளையா டுவதற்கு பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய விளையாட்டு பகுதிகள் மற்றும் பல்வேறு வகையான உணவு விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் அனைத்துத் தரப்பு மக்களும், மாணவ-மாணவிகளும் கலந்து கொண்டு பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் பொதுமக்கள், இளைஞர்கள், மாணவ-மாணவிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அமைச்சர்கள் பேசினர்.