தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.1000 கோடி அரசு நிலம் மீட்பு
- தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.1000 கோடி அரசு நிலம் மீட்கப்பட்டது.
- அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேட்டியளித்தார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறிய தாவது:-
தமிழக அரசால் 1910-ம் ஆண்டில் தோட்டக்கலை சங்கத்திற்கு 23 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. காலப்போக்கில் இந்த நிலம் தனிநபர் ஆக்கிரமிப்புக்கு உள்ளானது. 1989-ம் ஆண்டு கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்த போது ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்க நடவடிக்கை ேமற்கொண்டார்.
இதன் தொடர்ச்சியாக 2009-ம் ஆண்டில் 17 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டு, அங்கு செம்மொழி பூங்கா அமைக்கப்பட்டது. இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு மீதியிருந்த நிலத்தை மீட்கும் நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டது. இது தொடர்பான வழக்கும் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.
இந்த நிலம் அ.தி.மு.க. பிரமுகர் தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி என்பவரின் ஆக்கிரமிப்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பின்பு தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலங்களை மீ்ட்க நடவடிக்கை எடுத்தார்.
அந்த வகையில் ஆக்கிரமிப்பில் மீதம் இருந்த 6 ஏக்கர் நிலங்களை மீட்பதற்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் வரை சென்று தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நேற்று தமிழக அரசின் நில நிர்வாக ஆணையர் நாகராஜன் அந்த இடத்தை கையகப்படுத்தி சீல் வைத்தார். இதன் சந்தை மதிப்பு ரூ.1000 கோடியாகும்.
தொடர்ந்து தமிழகம் முழுவதும் தனிநபர் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலங்களை மீட்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப் படும்.
இவ்வாறு அவர் கூறினார்.