சிவகாசி காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ் நூற்றாண்டு விழா
- சிவகாசி காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ் நூற்றாண்டு விழா நடந்தது.
- தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு பிரதமர், முதல்-அமைச்சர் துணை நிற்கின்றனர் என்று மத்திய மந்திரி பேசினார்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ் தொழில் நிறுவனத்தின் நூற்றாண்டு விழா காளீஸ்வரி கல்லூரி வளாகத்தில் நடந்தது.
மதுரை தென்மண்டல அஞ்சலகத்தின் ஜெனரல் வி.எஸ்.ஜெயசங்கர் தலைமை தாங்கினார். இதில் மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பு தபால் உறையை வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்தியாவின் தென் பகுதிகளில் சிறப்புப்பெற்ற நகரமாக சிவகாசி திகழ்கிறது. அதற்குப் பட்டாசு, தீப்பெட்டி தொழில்களின் வளர்ச்சியே காரணமாகும். இந்த தொழில்கள் வறுமையில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கு காரணமாக அமைந்துள்ளன. ஆ.சண்முக நாடாரின் முயற்சியால் காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ் நிறுவனம் 1923-ல் தொடங்கப்பட்டது. முதலில் தீப்பெட்டி தொழிலே சிவகாசி மக்களிடையே அறிமுகம் செய்யப்பட்டது.
இன்று இந்த நிறுவனம் படிப்படியாக உயர்ந்து அலுமினியத் துகள்களின் உற்பத்தி, ஆரோ வாட்டர், எண்ணெய் உற்பத்தி போன்ற தொழில் துறை களில் சிறப்புப்பெற்றுத் திகழ்கிறது. இந்த குழுமத்தின் முயற்சியால் காளீஸ்வரி அறக்கட்டளை நிறுவப்பட்டது. அதன்கீழ் காளீஸ்வரி கல்லூரி செயல்பட்டு வருகிறது. அதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.
காளீஸ்வரி குழுமத்தின் கீழ் செயல்படும் தொழில் நிறுவனங்களில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பணிபுரிகின்றனர். வறுமையில் வாழும் மக்களின் வாழ்க்கை மேம்பா ட்டிற்கு இந்த நிறுவனங்கள் உதவிபுரிகின்றன.
காளீஸ்வரி குழுமம் அமெரிக்கா, ஜப்பான் மெக்சிகோ, கனடா, தென்ஆப்பிரிக்கா, மொரிசீயஸ் உள்ளிட்ட நாடுகளில் தங்கள் கிளைகளை நிறுவியுள்ளது. சிவகாசியின் அடையா ளங்களாகப் பட்டாசுத் தொழிலும், தீப்பெட்டித் தொழிலும் உள்ளன.
பிரதமர் மோடி தலைமை யிலான மத்திய அரசும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை யிலான மாநில அரசும் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்குப் பெரிதும் துணை நிற்கின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.
காளீஸ்வரி நிறுவனத்தின் இயக்குநர் அ.பா.செல்வராஜன் வாழ்த்துரை வழங்கினார். பெங்களூர் இஸ்ரோ யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையத்தின் இணை இயக்குநர் வெங்கடேஸ்வரா சர்மா கவுரவ விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார்.
காளீஸ்வரி நிறுவனத்தின் இயக்குநர் சி.சண்முகநாதன் வரவேற்றார். இயக்குநர் எஸ்.சண்முக நடராஜ் நன்றி கூறினார்.