போலீஸ் பிடியில் இருந்து தப்பிய கணவரை பிடிக்க தனிப்படை தீவிரம்
- போலீஸ் பிடியில் இருந்து தப்பிய கணவரை பிடிக்க தனிப்படை தீவிரம் காட்டி வருகிறார்கள்.
- விரைவில் பிடிபடுவார் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆவரம் பட்டியை அருகே உள்ள ஒத்தப்பட்டியை சேர்ந்தவர் மதிமன்னன்(வயது 28). வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, அவரது அத்தை மகளான பிரியாவுடன் திருமணம் செய்து வைக்கப்பட்டது. திருமணம் முடிந்த 6 மாதத்திலேயே கருத்து வேறுபாடு காரணமாக பிரியா கணவரை பிரிந்து சென்றுவிட்டார்.
இதையடுத்து பாண்டி செல்வி(22) என்பவரை மதிமன்னன் 2-வது திரு மணம் செய்தார். சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த மதிமன்னனுக்கு தனது 2-வது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் தனது பாட்டி இறந்ததால் ஒரு வாரத்திற்கு முன்பு பாண்டி செல்வி அங்கு சென்று விட்டார். அந்த வீட்டிற்கு நேற்று மதிமன்னன் சென்றார். அவர் வீட்டிற்குள் சுவர் ஏறி குதித்து சென்று மனைவி பாண்டிசெல்வியை கத்தியால் சரமாரியாக குத்தினார்.
இதில் படுகாயமடைந்த பாண்டிசெல்வி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த கொலை சம்பவம் குறித்து ராஜபாளையம் வடக்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி மதிமன்னனை கைது செய்தனர். மதிமன்னம் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி என்பதால் எழுத்து மூலமாக அவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணை முடிந்த நிலையில் அவரை சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். அதற்கு முன்னதாக ராஜ பாளையம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு மருத்து பரிசோத னைக்காக அழைத்து சென்றனர்.
இயற்கை உபாதை கழிக்க வேண்டும் என்று கூறிவிட்டு அங்கிருந்த கழிவறைக்கு சென்ற மதிமன்னன், ஆஸ்பத்திரியின் சுவர் ஏறி குதித்து தப்பி ஓடிவிட்டார். கழிவறைக்கு சென்றவர் வெகுநேரம் ஆகியும் திரும்பி வராததால் சந்தேகமடைந்த போலீசார் அவரை தேடி பார்த்தனர். அப்போது அவர் அங்கிருந்து தப்பி சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீஸ் பிடியில் இருந்து தப்பியோடிய மதிமன்னனை பிடிக்க ராஜபாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரீத்தி உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் சார்லஸ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று மதிமன்னனை தேடி வருகின்றனர்.
கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் தப்பியோடிய சம்பவம் குறித்து மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் உசார்படுத்தப் பட்டனர். இதனால் மதி மன்னன் விரைவில் பிடிபடு வார் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.