லாரி மோதி மாணவர்கள் படுகாயம்; கிராம மக்கள் மறியல்
- காரியாபட்டி அருகே லாரி மோதி மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
- விபத்தை ஏற்படுத்திய லாரியை பொதுமக்கள் முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர்.
காரியாபட்டி
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள கீழஉப்பிலிகுண்டு கிராமத்தை சேர்ந்தவர் ஆதிநாராயணன். இவரது மகன் வர்கீஸ் நவீன் (16). அதே பகுதியை சேர்ந்த லட்சுமணன் மகன் லாவண்யா (15).
இவர்கள் இருவரும் காரியாபட்டி அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். இன்று காலை பள்ளிக்கு செல்வதற்காக 2 பேரும் ஆவியூர் பஸ் ஸ்டாப்பிற்கு வந்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக கிரஷர் ஜல்லிக்கற்களை ஏற்றி வந்த லாரி எதிர்பாராத விதமாக 2 பேர் மீது மோதியது. இதில் வர்கீஸ்நவீன், லாவண்யா ஆகியோருக்கு கால் முறிவு ஏற்பட்டது.
இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அவர்கள் விபத்தை ஏற்படுத்திய லாரியை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த காரியாபட்டி வட்டாட்சியர் விஜயலட்சுமி, அருப்புக்கோட்டை ஏ.எஸ்.பி., போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.