உள்ளூர் செய்திகள்

நள்ளிரவில் சைக்கிளில் சென்று ஆய்வு செய்த போலீஸ் சூப்பிரண்டு

Published On 2023-04-09 08:57 GMT   |   Update On 2023-04-10 07:24 GMT
  • நள்ளிரவில் சைக்கிளில் சென்று போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.
  • பொங்கல் விழா பாதுகாப்புப் பணிக்காக சென்றிருப்பதாக காவலர் தெரிவித்தார்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் நேற்று நள்ளிரவில் சாதாரண உடையில் சைக்கிளில் ரோந்து சென்றார். அப்போது திடீரென அவர் மேற்கு காவல் நிலையத்தில் உள்ளே சென்றார் அங்கு ஒரே ஒரு காவலர் பணியில் இருந்தார் அவரிடம் தான் யார் என கூறாமல் மனு கொடுக்க வந்திருப்பதாக சூப்பிரண்டு கூறினார்.

அவரை அடையாளம் கண்டு கொள்ளாத காவலர், இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் வெளியே சென்றிருப்பதாகவும், வந்தவுடன் அவர்களிடம் மனு கொடுக்குமாறும் கூறியுள்ளார். இதையடுத்து இன்ஸ்பெக்டரின் இருக்கையில் அமர்ந்த சூப்பிரண்டு அங்கிருந்த கோப்புகளை ஆய்வு செய்துள்ளார். அப்போதுதான் பணியில் இருந்த காவலருக்கு யாரோ உயர் அதிகாரி வந்திருப்பதாக தெரியவந்துள்ளது. இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் எங்கு சென்றிருக்கிறார்கள் என காவலரிடம் போலீஸ் சூப்பிரண்டு விசாரித்தார்.

அவர்கள் மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழா பாதுகாப்புப் பணிக்காக சென்றிருப்பதாக காவலர் தெரிவித்தார். மேலும் காவலரிடம் தன்னை இதற்கு முன்பு பார்த்திருக்கிறீர்களா என்று போலீஸ் சூப்பிரண்டு கேட்டுள்ளார். அப்போது அவரைப் பார்த்ததில்லை என்று காவலர் கூறியுள்ளார். அவரிடம் தான் தான் போலீஸ் சூப்பிரண்டு என்பதை தெரிவித்துவிட்டு மீண்டும் தான் வந்த சைக்கிளில் ஏறி அவர் அங்கிருந்து சென்றார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாதாரண உடையில் சைக்கிளில் வந்து போலீஸ் ஸ்டேசனில் ஆய்வு செய்தது விருதுநகர் மாவட்டத்தில் போலீசார் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News