தாமிரபரணிகுடிநீர் திட்டத்துக்கு வரி வசூலிப்பதை முறைப்படுத்த வேண்டும்
- ராஜபாளையத்தில் நடைமுறைக்கு வராத தாமிரபரணிகுடிநீர் திட்டத்துக்கு வரி வசூலிப்பதை முறைப்படுத்த வேண்டும்.
- இது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜபாளையம்
ராஜபாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயவாளர் மாரியப்பன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
ராஜபாளையம் நகராட்சி தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் ரூ.180 கோடி மதிப்பீட்டில் 2018-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. 4 ஆண்டுகளாக நடைபெற்று வரும் பணி இன்னும் நிறைவடையவில்லை.
தாமிரபரணி கூட்டு குடிநீர்த்திட்டப் பணிக்காக நகராட்சியின் பங்குத் தொகையாக ரூ.53 கோடியை நகராட்சியில் இருந்து ஈடு செய்வதற்கு போதுமான நிதி இல்லாத காரணத்தால், மொத்த மதிப்பீட்டில் 20 சதவீதத்தை தமிழ்நாடு நிலையான நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கடனாக பெறுவதற்கு 11.7.2016-ம் தேதியன்று அ.தி.மு.க. தலைமையிலான நகர்மன்றம் தீர்மானம் நிறைவேற்றியது.
அந்த தீர்மானத்தில், குடிநீர் கட்டணம் மற்றும் வைப்புத் தொகைக்கான கட்டணத்தை மாற்றியமை த்தும் தீர்மானம் நிறைவேற்றினர். அதன்படி குடியிருப்புகளுக்கு 500 சதுரஅடி வரை மாதம் ரூ.50 என்பதை ரூ.150/- ஆகவும், அதற்கு மேல் சதுர அடிக்கு தகுந்தவாறு கட்டணத்தை நிர்ணயம் செய்யவும், வணிகம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு தனியாகவும் கட்டணம் நிர்ணயம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் அந்த தீர்மான த்தின் நிறைவாக திருத்தியமைக்கப்பட்ட கட்டண உயர்வு மற்றும் வைப்புத்தொகை திட்டம் பயனுக்கு வரும் நாள் முதல் நடைமுறைப்படுத்தவும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். ஆனால் தாமிரபரணி குடிநீர் திட்டப்பணிகள் ராஜபாளை யம் நகராட்சியில் இன்னும் நிறைவடையவில்லை. பணிகள் நிறைவடையாமல் ஆங்காங்கே தெருக்கள் மற்றும் சாலைகள் சேதமடைந்திருப்பதை யொட்டி மக்கள் சொல்லொனா துயரத்தை அனுபவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் 2016-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி திருத்தியமைக்கப்பட்ட குடிநீர் கட்டணத்தை 1.4.2022 முதல் நகராட்சி நிர்வாகம் வசூலிக்க ஆரம்பித்துள்ளது.
இது குறித்து பொது மக்களும், அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தி.மு.க. தலைமையிலான நகர்மன்றம் 21.7.2022-ம் தேதியன்று நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில், 500 சதுர அடிக்கு கீழ் உள்ள குடியிருப்புகளுக்கு மாதம் ரூ.100 எனவும், அதற்குமேல் உள்ள குடியிருப்புகளுக்கு மாதம் ரூ.150 எனவும், வணிகம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு தனியாகவும் கட்டணம் நிர்ணயம் செய்தும் தீர்மானம் நிறைவேற்றியது.
தி.மு.க தலைமையிலான நகர்மன்றம் குடிநீர் கட்டணத்தை மாற்றிய மைத்து தீர்மானம் நிறைவேற்றியிருக்கும் நிலையில், இதற்கு முன் பொறுப்பில் இருந்த அ.தி.மு.க. நகர்மன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தின்படி குடிநீர் கட்டணம் ஆண்டுக்கு ரூ.1800 (இதுவரை ஆண்டுக்கு ரூ.600) வழங்க வேண்டுமென குறிப்பாணை வீடுதோறும் வழங்கி உள்ளனர். இது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே தாங்கள் தலையிட்டு தாமிரபரணி குடிநீர் திட்டப்பணிகள் முடிந்து, பயன்பாட்டுக்கு வரும் வரை உயர்த்தப்பட்ட குடிநீர் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.