ரூ.1.5 லட்சம் மோசடி செய்த பெண் போலீஸ்
- ரூ.1.5 லட்சம் மோசடி செய்த பெண் போலீஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- கோவில்பட்டி இலுப்பையூரணியை சேர்ந்த பெண் போலீஸ் சேர்மக்கனி அறிமுகம் ஆனார்.
விருதுநகர்
சாத்தூர் அருகே சத்திரப்பட்டி பெரிய கொல்லம்பட்டி ரோடு பகுதியை சேர்ந்தவர் லதா. இவருக்கு கோவில்பட்டி இலுப்பையூரணியை சேர்ந்த பெண் போலீஸ் சேர்மக்கனி அறிமுகம் ஆனார்.
இருவருக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் தான் பேறுகால விடுப்பில் இருப்பதாகவும், அதனால் லதாவின் தங்கை நடத்தி வரும் தீப்பெட்டி ஆபீசை லீசுக்கு தருமாறும் லதாவிடம் சேர்மக்கனி கேட்டார். லதாவும் அதற்கு ஏற்பாடு செய்தார்.
லீசுக்கான தொகையை சேர்மக்கனி சரியாக கொடுத்து வந்தார். இந்த நிலையில் அவசர தேவைக்கு ரூ.1.5 லட்சம் தேவைப்படுவதாக கேட்டு வாங்கினார். ஆனால் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதத்தில் செக் ஒன்றை சேர்மக்கனி கொடுத்தார்.
ஆனால் அந்த காசோலை வங்கியில் இருந்து திரும்ப வந்தது. விசாரணையில் அந்த காசோலை வேறு ஒருவருடையது என தெரியவந்தது. இதனால் மீண்டும் சேர்மக்கனியிடம் பணத்தை தருமாறு லதா கேட்டார்.
அப்போது பணம்கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது என்று கூறினார். மேலும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார். இதுகுறித்து சாத்தூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் லதா வழக்கு தொடர்ந்தார்.
கோர்ட்டு உத்தரவுப்படி சாத்தூர் தாலுகா போலீசார் பெண் போலீஸ் சேர்மக்கனி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.