கம்யூனிஸ்டு கட்சியினர் திடீர் மறியல்
- அருப்புக்கோட்டையில் இன்று கம்யூனிஸ்டு கட்சியினர் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
- தரமான சாலை அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
அருப்புக்கோட்டை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சியில் குண்டும், குழியுமான சாலைகள் உள்ளன. இதனை சீரமைத்து புதிய சாலை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் நகராட்சியின் 16-வது வார்டான திருநகரம் பகுதியில் புதிய சாலை அமைக்க நகராட்சி சார்பில் ரூ. 1 கோடியே 16 லட்சம் செலவில் டெண்டர் விடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. மேற்கண்ட பகுதியில் ஏற்கனவே உள்ள குண்டும், குழியுமான சாலையை அப்புறப்படுத்தாமல் அதன் மேலேயே புதிய சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. மேலும் தரமற்ற முறையில் சாலைகள் அமைக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதனை கண்டித்தும், தரமான சாலையை அமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இன்று திருநகரம் விருதுநகர் சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நகரச் செயலாளர் காத்த முத்து தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் நகராட்சிக்கு எதிராக கோஷமிட்டனர். தகவல் அறிந்த அருப்புக்கோட்டை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தியபின் மறியல் கைவிடப்பட்டது.