தீபாவளி திருட்டை தடுக்க ராசிபுரத்தில் 3 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள்
- திருட்டு சம்பவங்கள் மற்றும் குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் போலீசார் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதியில் கண்காணிப்பு உயர் கோபுரங்களை அமைத்துள்ளனர்.
- கண்காணிப்பு உயர் கோபுர பாதுகாப்பு பணியில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
ராசிபுரம்:
நாக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் நித்திய சுமங்கலி மாரியம்மன் பண்டிகை மற்றும் தீபாவளி பண்டிகையை ஒட்டி ராசிபுரம் பூக்கடை வீதி, சின்னக் கடை வீதி, கடைவீதி, பஸ் நிலைய பகுதிகள் உள்பட முக்கிய இடங்களில் பொதுமக்கள் நடமாட்டம் அதிக அளவில் காணப்பட்டு வருகிறது. ஜவுளிகள் எடுக்கவும், நகைகள் வாங்கவும், இதர பொருட்களை வாங்கிச் செல்லவும் உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் திரளாக வந்து செல்கின்றனர்.
பொதுமக்களின் கூட்டத்தை பயன்படுத்தி, அவர்களது கவனத்தை திசை திருப்பி திருடர்கள் தங்கள் கைவரிசியை காட்டி செயின் பறிப்பு, நகை, பணம், வாகனங்கள் திருட்டு போன்ற சம்பவங்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. இதையடுத்து, திருட்டு சம்பவங்கள் மற்றும் குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் ராசி புரம் போலீசார் மக்கள் நடமாட்டம் அதிகம் இரு க்கும் பகுதிகளான பழைய பஸ் நிலையம், கடைவீதி, சின்னக் கடைவீதி ஆகிய இடங்களின் நுழைவு வாயிலில் கண்காணிப்பு உயர் கோபுரங்களை அமைத்துள்ளனர். நகரில் அமைக்கப்பட்டுள்ள இந்த 3 கண்காணிப்பு உயர் கோபுரங்களை ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் ஆகியோர் திறந்து வைத்தனர். கண்காணிப்பு உயர் கோபுர பாதுகாப்பு பணியில் சப்-இன்ஸ்பெக்டர் தங்கம், போக்குவரத்து சப்-இன்ஸ் பெக்டர் குணசிங் மற்றும் 10-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.