பாளை மண்டலத்தில் லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை
- குடிநீர் வினியோகம் முறையாக செய்யப்படாததை கண்டித்து பல்வேறு தரப்பினரும் மாநகராட்சி அதிகாரி களிடம் முறையிட்டு வருகின்றனர்.
- பாளை மண்டலத்துக்கு உட்பட்ட 33, 34, 35 மற்றும் 36-வது வார்டு பொதுமக்கள் மண்டல அலுவலகத்தில் மனு அளித்தனர்.
நெல்லை:
நெல்லை மாநகர பகுதியில் அரியநாயகிபுரம் கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருவதால் பள்ளங்கள் தோண்டப்படுவதாலும், குழாய் உடைப்பு ஏற்பட்டும் சில இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
அதிகாரிகளிடம் புகார்
குறிப்பாக பாளை மண்டலத்தில் 6 முதல் 8 நாட்களுக்கு ஒரு முறை தான் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. குறைந்தபட்சம் 2 நாட்களுக்கு ஒரு முறையாவது குடிதண்ணீர் சப்ளை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனாலும் குடிநீர் வினியோகம் முறையாக செய்யப்படவில்லை. இதனை கண்டித்து பல்வேறு தரப்பினரும் மாநகராட்சி அதிகாரி களிடம் முறையிட்டு வருகின்றனர். இன்று பாளை மண்டலத்துக்கு உட்பட்ட 33, 34, 35 மற்றும் 36-வது வார்டு பொதுமக்கள் பாளை தெற்கு பகுதி செயலாளர் திருத்து சின்னத்துரை தலைமையில் மண்டல அலுவலகத்தில் மனு அளித்தனர்.
லாரிகள் மூலம் சப்ளை
மாநகர பகுதியில் தொடர்ந்து நடைபெறும் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ஒரு சில இடங்களில் 10 நாட்களாகியும் குடி தண்ணீர் வராததால் பொது மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். பெரு மாள் மேலரத வீதி பகுதியில் ஒரு வாரமாக குடிநீர் சப்ளை செய்ய முடியாத நிலையில் இன்று மாநகராட்சி லாரி மூலம் குடிதண்ணீர் சப்ளை செய்யப்பட்டது. இதனை பொதுமக்கள் போட்டி போட்டு பிடித்துச் சென்றனர்.