நெல்லை மாநகராட்சியில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
- நெல்லை மாநகராட்சி கூட்ட அரங்கில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
- தச்சநல்லூர் கரையிருப்பு பசும்பொன் நகர் பகுதி பொதுமக்கள் மனு அளித்தனர்.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி கூட்ட அரங்கில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மேயர் சரவணன் தலைமை தாங்கினார். துணைமேயர் ராஜு, செயற்பொறியாளர் வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நெல்லை மாநகராட்சி 2-வது வார்டுக்கு உட்பட்ட தச்சநல்லூர் கரையிருப்பு பசும்பொன் நகர் பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து அளித்த மனுவில், எங்களது பகுதியில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக சுமார் 25 குடும்பங்கள் வீடு கட்டி வசித்து வருகிறோம். ஆனால் இதுவரை எங்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை. இது தொடர்பாக பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறியிருந்தனர்.
மாநகராட்சி 5-வது வார்டு கவுன்சிலர் ஜெகநாதன் அளித்த மனுவில், ரஹ்மத் நகர் உள்ளிட்ட இடங்களில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை. பல்வேறு முறைகேடுகளும் நடைபெற்று வருகிறது. எனவே மேயர் மாநகராட்சி சார்பில் வார்டில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்து பின்னர் அதற்கான பணத்தை செலுத்த வேண்டும் என்று கூறி இருந்தார்.
நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் 41- வது வார்டுக்கு உட்பட்ட இந்திராநகர், சோனியா நகர், காருண்யா நகர், மற்றும் பகுதிகளை உள்ளடக்கிய மக்கள் நல்வாழ்வு சங்கத்தினர் அளித்த மனுவில் காருண்யா நகர்-பொன்விழா நகர் இணைப்பு சாலை அமைக்க வேண்டும். அந்த இடத்தில் புதிதாக தெரு விளக்கு ஒன்று அமைக்க வேண்டும். மாதம் ஒருமுறை மாஸ் கிளீனிங் நடத்த வேண்டும். தேவையான இடங்களில் வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.