உள்ளூர் செய்திகள்

விழாவில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர்கள் உதயகுமார், கடம்பூர் ராஜூ ஆகியோருக்கு நகர செயலாளர் ராஜகுமார் பூங்கொத்து கொடுத்து வரவேற்ற காட்சி.

எட்டயபுரத்தில் நலத்திட்ட உதவிகள்- ஓ.பன்னீர்செல்வத்தின் யுத்தங்கள் தோல்வியில் தான் முடிந்துள்ளது-முன்னாள் அமைச்சர் உதயகுமார் தாக்கு

Published On 2022-08-22 09:27 GMT   |   Update On 2022-08-22 09:27 GMT
  • முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ ஆகியோர் கலந்து கொண்டு கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு சான்றிதழ், விருது வழங்கி கவுரவித்தனர்.
  • ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் 7 முறை தனது நிலைப்பாட்டினை ஓ.பன்னீர்செல்வம் மாற்றியுள்ளார் என்று ஆர்.பி.உதய குமார் கூறினார்.

எட்டயபுரம்:

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் அ.தி.மு.க 50-வது ஆண்டு பொன்விழா, முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ., பிறந்தநாள் விழா நடந்தது.

நலத்திட்ட உதவிகள்

நிகழ்ச்சிக்கு மகளிர் அணி பொறுப்பாளர் சுப்புலட்சுமி சந்திரன் தலைமை தாங்கினார். எட்டயபுரம் அ.தி.மு.க. நகர செயலாளர் ராஜகுமார் வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ ஆகியோர் கலந்து கொண்டு கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு சான்றிதழ், விருது வழங்கி கவுரவித்தனர். மேலும் நலத்திட்ட உதவிகளும் வழங்கினார்.

பின்னர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதய குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் 7 முறை தனது நிலைப்பாட்டினை ஓ.பன்னீர்செல்வம் மாற்றியுள்ளார்.ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஓ.பன்னீர் செல்வம் முதல்-அமைச்சராக பதவி ஏற்றார்.பின்னர் ராஜினாமா செய்தார்.

அதன் பின்னர் தர்மயுத்தம் தொடங்கினார். பின் தி.மு.கவுடன் இணைந்து சட்டமன்றத்தில் அ.தி.மு.கவிற்கு எதிராக வாக்களித்தார். பின்னர் எடப்பாடி பழனிசாமி எடுத்த முயற்சியின் காரணமாக ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இணைக்கப்பட்டு துணை முதல்வர், கட்சி ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. இருந்த போதிலும் அவரிடம் இருந்து ஒத்துழைப்பு முழுமையாக கிடைக்கவில்லை.

முதல்-அமைச்சர் வேட்பாளர் யார் என்று அறிவிக்கும் போது ஓ.பி.எஸ். மவுன யுத்தம் நடத்தினார். இதனால் அ.தி.மு.க செல்வாக்கு 5 சதவீதம் சரிந்தது.

மவுன யுத்தம்

எப்போது எல்லாம் தனக்கு பதவி கிடைக்க வில்லையோ அப்போது எல்லாம் ஒரு மவுன யுத்தத்தினை தொடங்குவார். அதற்கு பெயர் தர்மயுத்தம் என்று சொல்வார்.ஓ.பி.எஸ் மவுனமாக தொடங்கும் யுத்தம் தர்மயுத்தம் அல்ல அது துரோக யுத்தம் .

சட்டமன்ற உறுப்பி னர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஒட்டுமொத்த பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அணிவகுத்து நிற்கின்றனர்.

எப்போது எல்லாம் தன் பதவிக்கு ஆபத்து வருகிறதோ, அப்போது எல்லாம் கட்சிக்கு ஆபத்து போன்ற மாயத்தோற்றத்தினை ஓ.பி.எஸ் உருவாக்குவார். அதற்காக போராடுவார், தர்மயுத்தத்தினை நடத்துவார்.அவருடைய யுத்தங்கள் தோல்வியில் தான் முடிந்துள்ளது தவிர ஓ.பி.எஸ்க்கு வெற்றி தராது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏக்கள் மோகன், சிவபெருமாள், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் வேலுச்சாமி,ஊராட்சி குழு தலைவி சத்யா, மகளிர் அணி ரத்தினம், எம்.ஜி.ஆர் இளைஞர் அணி மாநில இணைச்செயலாளர் சீனி ராஜீ, அ.தி.மு.க புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் தனவதி, எட்டயபுரம் பேரூராட்சி கவுன்சிலர் அய்யம்மாள் கருப்பசாமி, வார்டு செயலாளர்கள் முத்துகிருஷ்ணன், கார்ட்டன் பிரபு, ஒன்றிய நகர, நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News