கடலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் அனைத்துத் துறை அலுவலர்களுடன் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் குடும்பஅட்டை, முதியோர் உதவி த்தொகை, மாற்றுதிறனாளிகள் உதவித் தொகை, பட்டா, நிலஅளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் நேரில் அளித்தனர். இந்த குறைதீர்வு கூட்டத்தில், பட்டா தொடர்பாக 124 மனுக்களும், ஆக்கிரமிப்பு தொடர்பாக 55 மனுக்களும், முதியோர் உதவித்தொகை தொடர்பாக 46 மனுக்களும், குழந்தைகள் கல்வி உதவித்தொகை தொடர்பாக 34 மனுக்களும், ஊரக வளர்ச்சி துறை தொடர்பான 82 மனுக்களும், காவல்துறை தொடர்பாக 47 மனுக்களும், தையல் இயந்திரம் கோரி 33 மனுக்களும், வேலைவாய்ப்பு தொடர்பாக 35 மனுக்களும், மாற்றுத்திறனாளி நல அலுவலகம் தொடர்பாக 23 மனுக்களும், இதர மனுக்கள் 144 ஆக மொத்தம் 623 மனுக்கள் வரப்பெற்றன.
பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என கலெக்டர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து கலெக்டர் அருண் தம்புராஜ் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடை உபகரணத்தை 14 நபர்களுக்கு ரூ.75,000 மதிப்பீட்டிலும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் 1 பயனாளிக்கு தையல் எந்திரத்தையும் வழங்கினார்.இக்கூட்டத்தில் தனித்துணை கலெக்டர் ரமா மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.