காவிரி ஆற்றில் தடுப்பணை கட்ட குழி தோண்டியபோதுபொக்லைன் எந்திரம் கவிழ்ந்து டிரைவர் பலி
- நன்செய் புகளூர் காவிரி ஆற்றின் குறுக்கே அனிச்சம்பாளையம் என்ற இடத்தில் ரூ.406.50 கோடி மதிப்பீட்டில் கதவணை கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
- ராஜேஷ் (வயது 36) என்பவர் காவிரி ஆற்றின் நடுப்பகு தியில் தண்ணீருக்குள் இருக்கும் மணல்களை அள்ளிக் கொண்டிருந்தார்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே-கரூர் மாவட்டம் நன்செய் புகளூர் காவிரி ஆற்றின் குறுக்கே அனிச்சம்பாளையம் என்ற இடத்தில் ரூ.406.50 கோடி மதிப்பீட்டில் கதவணை கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
கதவணை கட்டுமான பணி கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்பணிகளுக்கு நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா நன்செய் இடையார் பகுதியைச் சேர்ந்த தனியாருக்கு சொந்தமான பொக்லைன் எந்திரம் பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்த பொக்லைன் எந்திரம் மூலம் பொத்தனூர் பகுதியைச் சேர்ந்த டிரைவர் ராஜேஷ் (வயது 36) என்பவர் காவிரி ஆற்றின் நடுப்பகு தியில் தண்ணீருக்குள் இருக்கும் மணல்களை அள்ளிக் கொண்டிருந்தார். நேற்று முன்தினம் பெய்த கனமழையின் காரணமாக காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகமாக சென்று கொண்டிருக்கிறது. இதன் காரணமாக காவிரி ஆற்றுக்குள் மேடு, பள்ளம் தெரியவில்லை.
இந்த நிலையில் ராஜேஷ் தண்ணீருக்குள் உள்ள மணல்களை அள்ளிக் கொண்டு சென்ற போது காவிரி ஆற்றுக்குள் பள்ளம் இருப்பது தெரியாமல் பொக்லைன் எந்திரம் நகர்ந்த போது பள்ளத்துக்குள் கவிழ்ந்தது. பொக்லைன் எந்திரத்தில் ஏசி பொருத்தப் பட்டி ருந்ததால் டிரை வரின் இருக்கை சுற்றி அடைக்கப்பட்டிருந்தது. இதனால் டிரைவர் ராஜேஷ் தப்பி வெளியே வர முடியவில்லை. பொக்லைன் எந்திரம் பள்ளத்தில் கவிழ்ந்ததை பார்த்த அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் ஓடி வந்து உடனடியாக அருகாமையில் பணியாற்றி வந்த ஜே.சி.பி எந்திரத்தை வரவழைத்தனர்.
ஜே.சி.பி எந்திரம் வந்து பொக்லைன் எந்திரத்தை தூக்கி நிறுத்திய போது அதன் டிரைவர் ராஜேஷ் அவரது இருக்கையில் இருந்து வெளியில் வரும் முடியாமல் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. ராஜேஷின் உடலை மீட்டு காவிரி ஆற்றின் கரைக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து ராஜேஷ் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்தில் ராஜேஷ் உடலை பார்த்த அவரது மனைவி மோகனா மற்றும் அவரது உறவினர்கள் கதறி அழுதனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ராஜேஷின் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.