ஆலங்குளம் அருகே ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.4 லட்சம் நகை கொள்ளையடித்த கும்பல் யார்? - போலீசார் விசாரணை
- விஜயன் காட்டு பகுதியில் உட்கார்ந்து குடித்து கொண்டிருந்தார்.
- தன்னுடன் மது குடித்த 2 பேருடன் விஜயன் தனது செல்போனில் செல்பி எடுத்துள்ளார்.
ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம் சுரண்டை வரகுணராமபுரம் அம்மன் கோவில்தெருவை சேர்ந்தவர் விஜயன் (வயது 50). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் வேலை விஷயமாக ஆலங்குளம் வந்துள்ளார். தனது வேலையை முடித்துவிட்டு ஆலங்குளம் ஜோதி நகர் அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வந்துள்ளார்.
நகை கொள்ளை
அங்கு மது வாங்கி கொண்டு அருகிலுள்ள காட்டு பகுதியில் உட்கார்ந்து குடித்து கொண்டிருந்தார். அப்போது 3 பேர் விஜயன் அருகில் உட்கார்ந்து மது குடித்துள்ளனர். இதில் அவர்கள் நண்பர்களாகி மேலும் விஜயனை குடிக்க வைத்துள்ளனர்.
தொடர்ந்து அவரை காட்டுப் பகுதிக்குள் அழைத்துச் சென்ற போது திடீரென மேலும் 3 பேர் வந்துள்ளனர். 6 பேரும் சேர்ந்து கையில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து விஜயன் கழுத்தில் வைத்துக் கொண்டு கழுத்தில் இருந்த 22 கிராம்செயின், கை செயின் 20 கிராம், மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து அதில் இருந்த அவரது மகனின் 120 கிராம் வெள்ளி கொடி, 40 கிராம் எடை கொண்ட 2 வெள்ளி கை செயின், ரொக்கம் 60 ஆயிரம், ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டி விட்டு அவரது மோட்டார் சைக்கிள் சாவியையும் எடுத்துக் கொண்டு அந்த கும்பல் அங்கிருந்த தப்பியோடி விட்டது.
தனிப்படை விசாரணை
இச்சம்பவம் குறித்து விஜயன் ஆலங்குளம் போலீசில் புகார் கொடுத்தார். அதில் தன்னிடம் இருந்து ரூ. 4 லட்சம் மதிப்புள்ள பணம், நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதாக கூறியிருந்தார். அதன் பேரில் ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
இந்நிலையில் விஜயன் தன்னுடன் சேர்ந்து மது குடித்த 2 பேருடன் தனது செல்போனில் செல்பி எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை வைத்து போலீசார் அவரிடம் நகைகளை பறித்து சென்ற நபர்களை தேடி வருகின்றனர்.
ஆலங்குளத்தில் ஏற்கனவே நியமிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் ஒரு மாத காலத்திற்குள் வேறு பணியிடத்திற்கு சென்று விட்டார். புதிய போலீசார் இங்கு இல்லை என கூறப்படுகிறது. இதனால் ரோந்துபணியில் ஈடுபடுவது இப்பகுதியில் குறைந்துள்ள காரணத்தால் குற்ற சம்பவங்கள் பெருகி வருவதாகவும், இதனை தடுக்க போதிய காவலர்களை நியமித்து கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.