சேலம் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை ஏற்காட்டில் 29.6 மி.மீ பதிவு
- சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்து, பனிப்பொழிவு அதிகரிக்க தொடங்கியது.
- இந்த நிலையில், சேலத்தில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
சேலம்:
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்து, பனிப்பொழிவு அதிகரிக்க தொடங்கியது.
இந்த நிலையில், சேலத்தில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் 3 மணியளவில் லேசான சாரல் மழை பெய்ய தொடங்கியது. இதையடுத்து மாவட்டத்தில் ஏற்காடு, ஆத்தூர், ஓமலுார், எடப்பாடி, சங்ககிரி, மேட்டூர், ஓமலூர், தலைவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் சாலையிலும், தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
சேலம் மாநகரத்தில் பழைய மற்றும் புதிய பஸ் நிலையம், அழகாபுரம், சூரமங்கலம், அஸ்தம்பட்டி, கிச்சிப்பாளையம், அன்ன
தானப்பட்டி, கொண்ட லாம்பட்டி உள்பட பல்வேறு இடங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது. அஸ்தம்பட்டி, காந்திரோடு பகுதியில் சாலையோரம் இருந்த ஒரு மின்கம்பம் சாய்ந்து விழுந்ததால் அங்கு மின்சாரம் தடைபட்டது. பின்னர் அதை சரிசெய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்த மழையினால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஏற்காட்டில்...
கிறிஸ்துமஸ் பண்டி கையை ஒட்டி, ஏற்காட்டிற்கு நேற்று முன்தினம் இரவே அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்து, அங்குள்ள விடுதிகளில் தங்கினர். காலையில் ஏற்காட்டை சுற்றி பார்க்க காத்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை முதல் ஏற்காடு, அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பனிமூட்டம் நிலவியது. 5 அடி தூரத்தில் உள்ளவர் கூட தெரியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் சென்றனர்.
மாலை 3 மணிக்கு மேல் திடீரென மழை பெய்ய தொடங்கியது. மாலை முதல் இரவு 8 வரை தொடர்ந்து மழை பெய்தது. இருப்பினும் சுற்றுலா பயணிகள் நனைந்தபடியும், குடைபிடித்த படியும் அண்ணா, ஏரி பூங்காக்கள், ரோஜா தோட்டம், லேடீஸ், ஜென்ட்ஸ் சீட் பகுதிகளை பார்த்து ரசித்தனர். பலர், படகு இல்லத்தில் சவாரி செய்து மகிழ்ந்தனர்.
சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 29.6 மில்லி மீட்டர் மழை பதிவானது.
மழையளவு
சேலம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:-ஏற்காடு - 29.6, தலை வாசல் - 14, பெத்தநா யக்கன்பாளையம்-10, ஆனைமடுவு - 10, சேலம்-9.6, ஓமலூர்- 9, எடப்பாடி-9, கரிய கோவில் - 9, வீரகனூர் - 8, ஆத்தூர் - 7.2 தம்மம்பட்டி-6, சங்ககிரி - 5.3, கெங்கவல்லி - 4, காடையாம்பட்டி - 4, மேட்டூர் - 3.4 என மாவட்டம் முழுவதும் 138.10 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.