உள்ளூர் செய்திகள் (District)

தென்காசி மாவட்டத்தில் அணை பகுதிகளில் பரவலாக மழை

Published On 2024-06-24 06:11 GMT   |   Update On 2024-06-24 06:11 GMT
  • சேர்வலாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மட்டும் 2 மில்லி மீட்டர் மழை பெய்தது.
  • குளிர்ந்த காற்று வீசுவதால் இதமான சூழ்நிலை நிலவி வருகிறது.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பிற்பகலில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் வானம் மேக மூட்டமாக காட்சியளித்தது. ஆனால் மழை எதுவும் பெய்யவில்லை. அதேநேரம் கடந்த சில நாட்கள் பெய்த சாரல் மழை காரணமாக அணைகளுக்கு குறைந்த அளவில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பிரதான அணையான பாபநாசம் அணைக்கு 433 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

143 அடி கொண்ட அந்த அணையின் நீர்மட்டம் தற்போது 87.80 அடியாக உள்ளது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 98.16 அடியாகவும், மணிமுத்தாறு அணையில் நீர் இருப்பு 77.94 அடியாகவும் உள்ளது. கடந்த ஆண்டு இந்த 3 அணைகளிலும் தற்போதைய அளவை விட பாதிக்கும் கீழாகவே நீர் இருப்பு இருந்தது. சேர்வலாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மட்டும் 2 மில்லி மீட்டர் மழை பெய்தது.

இன்று காலை முதலே மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வானில் கருமேகங்கள் திரண்டு காணப்படுகிறது.

குளிர்ந்த காற்று வீசுவதால் இதமான சூழ்நிலை நிலவி வருகிறது. ஒரு சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது.

தென்காசி மாவட்டத்தில் சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கேரளாவில் பெய்து வரும் மழையின் எதிரொலியாக தென்காசியில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டி அமைந்துள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்த வண்ணம் உள்ளது. சிவகிரி பகுதியில் மட்டும் 1 மில்லி மீட்டர் மழை பெய்தது.

அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் சாரல் மழை பெய்த வண்ணம் உள்ளது. இன்று காலை வரை ராமநதியில் 8 மில்லிமீட்டரும், கருப்பாநதியில் 5.5 மில்லி மீட்டரும், குண்டாறில் 2 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. 84 அடி கொண்ட ராமநதி அணை நீர்மட்டம் 66 அடியை எட்டியுள்ளது.

குண்டாறு அணை நீர்மட்டம் 32 அடியை நெருங்கி உள்ளது. அடவிநயினார் அணையில் 67 அடி நீர் இருப்பு உள்ளது.

மலைப்பகுதியில் பெய்யும் மழையின் காரணமாக குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அதில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து வருகின்றனர். மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து குளித்து செல்கின்றனர்.

Tags:    

Similar News