தென்காசி மாவட்டத்தில் அணைப்பகுதிகளில் பரவலாக மழை- குற்றாலத்தில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு
- நெல்லை மாநகர் பகுதிகளில் திடீரென இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
- தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்தது.
தென்காசி:
நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை திடீரென வானில் கருமேகக்கூட்டங்கள் கூடியது. தொடர்ந்து இடி-மின்னலுடன் கனமழை பெய்தது.
பரவலாக மழை
தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில் நெல்லையில் திடீரென மழை பெய்தால் பட்டாசு பிரியர்கள் சற்று வருத்தம் அடைந்தனர். நெல்லை மாநகர் பகுதிகளில் காலை நேரத்தில் வெயில் சுட்டெரித்த நிலையில் மதியத்தில் திடீரென இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
நெல்லை மாநகர் பகுதிகளான சந்திப்பு, டவுன், உடையார்பட்டி, வண்ணார்பேட்டை, பாளை, கேடிசி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அதேபோல் நெல்லை புறநகர் பகுதிகளான அம்பாசமுத்திரம், வீரவநல்லூர், சேரன்மகாதேவி உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஆனால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
தீபாவளி பண்டிகையையொட்டி 4 நாட்கள் தொடர்விடுமுறை பள்ளி, கல்லூரிகளுக்கு விடப்பட்டதால் இன்று சுற்றுலா பயணிகள் கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது. மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து காட்டியது.
மாவட்டத்தில் சங்கரன்கோவிலில் அதிகபட்சமாக 11 மில்லிமீட்டர் மழை பெய்தது. மிகச்சிறிய அணையான குண்டாறு அணையில் 8.4 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. அடவிநயினார் அணை பகுதியில் 3 மில்லிமீட்டர் மழை பெய்தது.